பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பல்லவப் பேரரசர்



பரவியதை நோக்க, அரசன் சைவனாகி, அப்பிரசாரத்திற்கு வேண்டிய ஆக்கம் அளித்தான் என்பது நம்பவேண்டுவதாக இருக்கிறது. மஹேந்திரன் சிறந்த சிவபக்தனாக இருந்தான் என்பது மேற்சொன்ன கல்வெட்டுகளாலும், இசையைப் பற்றிய கல்வெட்டிற் காணும் “சித்தம் நமசிவாய” என்னும் தொடராலும் நன்கறியலாம்.


6. குடைவரைக் கோவில்கள்

குடைவரைக் கோவில்கள்

மஹேந்திரவர்மன் திருவதிகையில் குணபர ஈஸ்வரம் கட்டியதுபோலவேறெந்தக் கோவிலையும் கட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், அவன் மலைச்சரிவுகளைக் குடைந்து கோவில்களாக அமைத்தான். அத்தகைய பல கோவில்கள் தமிழ் நாடெங்கும் பரந்து இருக்கின்றன. அவை ‘குடைவரைக் கோவில்கள்’ (மலைகளிற் குடைந்த கோவில்கள்) எனப்படும். அவை பல்லாவரம், திருவல்லம், மாமண்டூர், மஹேந்திரவாடி, தளவானூர், மண்டபப்பட்டு, சீயமங்கலம், திருச்சிராப்பள்ளி, சித்தன்னவாசல், முதலிய இடங்களிற் பரவி இருக்கின்றன. இவற்றுள் மாமண்டூர், மஹேந்திரவாடி என்னும் இடங்களில் குடையப்பட்டவை பெருமாள் கோவில்கள் ஆகும். சியமங்கலம், பல்லாவரம்,திருவல்லம், தளவானுர், திருச்சிராப்பள்ளி - என்னும் இடங்களில் குடையப்பட்டவை. சிவன் கோவில்கள் ஆகும்: மண்டபப்பட்டில் உள்ளது மும்மூர்த்தி கோவில்; சித்தன்னவாசலில் இருப்பது சமணர் கோவில் ஆகும்.