பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பல்லவப் பேரரசர்



பல சிற்றுார்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று ஜமீன் பல்லாவரம் என்பது. அவ்வூரின் எதிரில் உள்ள குன்றின் சரிவில் மஹேந்திரன் குடைவித்த கோவில் இருக்கின்றது. அஃது இப்பொழுது முஸ்லிம்கள் தொழுகை இடமாக இருக்கின்றது. கோவிற் சுவர்கள் வெண்மை அடிக்கப் பட்டுப் பாறைக்கோவில் என்ற எண்ணமே உண்டாக வழியற்றிருக்கிறது. கோவிலின் நீளம் ஏறத்தாழ இருபத்து நான்கு அடி அகலம் சுமார் பன்னிரண்டு அடி. ஐந்து கற்றுண்கள் இருக்கின்றன. கோவிற் சுவரில் ஐந்து உள்ளறைகள் இருக்கின்றன. அவற்றில் மூர்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தன. இப்பொழுது ஒன்றுமில்லை. ஐந்து அறைகள் இருப்பதால் ஊரார் அக்கோவிலைப் பஞ்ச பாண்டவர் கோவில் என்கின்றனர். விட்டத்தின் மீது மஹேந்திரனுடைய விருதுப்பெயர்கள் வடமொழியிலும் தெலுங்கிலும் காணப்படுகின்றன.

பழைய நகரம்

இந்தக் கோவிலுக்கு எதிரே உள்ள ஜமீன் பல்லாவரம் பழைய தோற்றம் கொண்டதாகும். தெருக்கள் சிதறிக் கிடக்கும் காட்சி அதன் பழைமையை நன்குணர்த்துகிறது. ஆங்காங்குத் தோண்டும்பொழுது நாணயங்கள், பழைய பானை ஒடுகள், சவப்பெட்டிகள் கிடைத்தபடி இருக்கின்றன. இப்பழைய நகரம் மஹேந்திரன் காலத்தில் ‘பல்லவபுரம்’ என்ற பெயருடன் சிறப்புற்றிருந்தது என்பதில் ஐயமில்லை.

2. வல்லம்

இவ்வூர் செங்கற்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் போகும் பாதையில் இரண்டு கல் தொலைவில் இருப்பது.