பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

பல்லவப் பேரரசர்



பண்கள் இருவகை வீணைகட்கும் பயன்படும் என்பது தெரிகிறது.ஏழு நரம்புகளைக் கொண்டவீணையே எங்கும் இருப்பது எட்டுநரம்புகளையுடைய வீணை புதியது. அது மஹேந்திரன் கண்டு பிடித்துக் கையாண்டதுபோலும்! மஹேந்திரனை ‘இசைப்பித்தன்’ என்று சொல்லலாம். இவன் இயற்றியுள்ள மத்தவிலாசப் பிரஹசனத்தில் ஒரு நடிகன் கூறுவதாக இசை நடனங்களின் சிறப்பைக் கீழ்வருமாறு குறித்துள்ளான்: “இசை எனது செல்வம். - ஆஹா, நடிப்பவரது அழகிய நடனம் பார்க்க இன்பமாக இருக்கிறது. தாளத்திற்கும் இசைக்கும் ஏற்ப அவர்கள் திறம்பட மெய்ப்பாடுகளை விளக்கி நடிக்கின்றனர்.”

நாயன்மார் இசை

பல்லவர் வருகைக்கு முன்பே நமது தமிழ்நாட்டில் இசை மிக உயர்ந்த நிலையில் இருந்தது. தமிழுக்கே உரிய குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழு வகைப் பண்கள் வழக்கில் இருந்தன; பலவகை இசைக்கருவிகள் இருந்தன. அவை தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி என்பன. தமிழகத்தில் மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ், பேரியாழ் முதலிய யாழ் வகைகள் இருந்தன. யாழில் பாடுநர் “யாழ்ப்பாணர் எனப்பட்டனர். திருநாவுக்கரசர் காலத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் சிறந்த யாழ் மீட்டுபவராக இருந்தார். நாயன்மார் பாடிய திருப்பதிகங்கள் பெரும்பாலும்தமிழ்ப்பண்களில் அமைந்துள்ளன. எனவே, மஹேந்திரன் காலத்தில் வீணையும் யாழும் வழக்கில் இருந்தன. தமிழிசை தமிழகத்திற் சிறப்பிடம்பெற்றிருந்தது என்பன அறியலாம்.