பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

71



ஊராகிய திருச்செங்காட்டங்குடியிற் குடியேறினார்; அங்குக் ‘கணபதி ஈஸ்வரம்’ என்ற சிவன் கோவிலைக் கட்டிச் சிவ வழிபாட்டில் காலம் கழித்து வந்தார்.

பல்லவர் - பாண்டியர் போர்

நரசிம்மவர்மன் ‘சோழ, பாண்டிய, களப்பிரரை வென்றவன்’ என்று முன்சொன்ன பல்லவர் பட்டயம் பகர்கின்றது. அக்காலத்தில் இருந்த பாண்டிய மன்னன் நெடுமாறன் (கி.பி.640-680) என்பவன். அவன் மனைவியே சைவப் பெண்மணியாரான மங்கையர்க்கரசியார். ஆகவே, நெடுமாறன் காலத்தில் மங்கையர்க்கரசியார் தந்தை அல்லது உடன்பிறந்தான் சோழ அரசனாக இருந்திருத்தல் வேண்டும். இவர்கள் சோழ நாட்டைக் கவர்ந்த பல்லவரை எதிர்க்கத் தக்க சமயம் பார்த்து வந்தனர் போலும்! புலிகேசி வடக்கே இருந்து பல்லவ நாட்டைத் தாக்கிய பொழுது, இவர்கள் ஒன்றுசேர்ந்து தெற்கே இருந்து பல்லவனைத் தாக்கி இருக்கலாம். அதனாற் போலும், நரசிம்மவர்மன் சாளுக்கியனைத் துரத்திக் கொண்டு வாதாபி செல்லாமல், பரஞ்சோதியாரை அனுப்பிவிட்டுத் தான் தமிழரசரை எதிர்க்க நின்றுவிட்டான் ‘நெடுமாறன் சங்கரமங்கையில் பல்லவனைப் புறங்கண்டவன்’ என்று பாண்டியர் பட்டயம் குறிக்கின்றது. இதனால், இரண்டோர் இடங்களில் பாண்டியன் வெற்றி பெற்றிருக்கலாம்; ஆயினும் தமிழரசர் முயற்சி பலன் அளித்திலது.

பல்லவர் - கங்கர் போர்

நரசிம்மவர்மன் காலத்தில் கங்க அரசனாக இருந்தவன் துர்விநீதன் என்ற முதியவன். அவன் சிம்மவிஷ்ணு