பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

73



நற்பண்புகளில் ஈடுபட்டு மகிழ்ந்தவன்; ஆதலால் அவனுக்கு உதவிசெய்ய விரும்பித் தன் கப்பற்படையை அவனுடன் இலங்கைக்கு அனுப்பினான். படை உதவிபெற்ற மானவன்மன் இலங்கையில் இறங்கிப் பகைவனுடன் போரிட்டான் முதற்போரில் வெற்றி பெற்றான்; அடுத்த போரில் தோல்வியுற்றான். தம் வேந்தன் நேரே இல்லாததால் பல்லவன் படையும் கடுமையாகப் போர்புரியவில்லை போலும்! மானவுன்மன் மீட்டும் காஞ்சிக்குத் திரும்பினான்.

இலங்கைப் போர் II

அவனது தோல்வியைக் கேட்ட பல்லவன் மனம் வருந்தினான்; வன்மை மிக்க படைவீரரை மாமல்லபுரத்திற்கு அனுப்பினான். அரசனும் அங்குச்சென்றான். கப்பல்கள் வீரரை ஏற்றிச்செல்லக் காத்திருந்தன. வேந்தன் தானும் அவ்வீரருடன் கப்பலில் வருவதாக நடித்தான். எல்லா வீரரும் உணர்ச்சியோடு பிரயாணம் செய்தனர்; இலங்கையை அடைந்தனர். தம் அரசன் கப்பலில் இருப்பதாக எண்ணிக்கொண்டு, கடுமையாகப் போரிட்டனர்; அட்டதத்தன் படைகளை அலற அடித்தனர். அட்டதத்தன் மறைந்தான். மானவன்மன் முன்போல் இலங்கை அரசனாக முடிசூட்டப்பட்டான்.

நரசிம்மவர்மனது இலங்கை வெற்றியைப்பற்றிப் பல்லவர் பட்டயம் ஒன்று, “நரசிம்மவர்மன் இலங்கையில் பெற்ற வெற்றி, இராமன் இலங்கையில் பெற்ற வெற்றியைப் போன்றது,” என்று பாராட்டியுள்ளது.