பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

77



இவை ‘கோவில்கள்’ என்பதை அறியாமல் மாமல்லபுரத்து மக்கள் ‘தேர்கள்’ எனத் தவறாக வழங்கினர். இவை ஐந்தாக இருத்தலைக் கண்டு தருமராஜன் தேர், பீமசேனன் தேர், அர்ச்சுனன் தேர், சகதேவன் தேர், திரெளபதி தேர் எனப் பெயரும் இட்டுவிட்டனர். இதனைப் பின்பற்றியே ஆராய்ச்சியாளரும் சுட்டி விளக்கலாயினர். இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.


1. தருமராஜன் தேர்

இது சிவன் கோவில் ஆகும். இது மூன்று தட்டுகளைக் கொண்ட விமானத்தை உடையது. இரண்டாம் தட்டின் நடுவில் மாடப்புரை வெட்டப் பட்டுள்ளது. அதன் அடியில் சோமாஸ்கந்தர் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இக்கோவில் விமானம் ஆராய்ச்சிக்குரியது. இதன் வளர்ச்சியே காஞ்சி - கயிலாசநாதர் கோவில் விமானமாகும்; அதன் வளர்ச்சியே தஞ்சை - இராஜராஜேஸ்வரத்தின் விமானமாகும்.

2. மசேனன் தேர்

இதுவும் சிவன்கோவிலே ஆகும். இதன் மேற்கூரை அமைப்பும் சாளர அமைப்பும் பெளத்த விஹார அமைப்பை ஒத்துள்ளன. விமானத்தைச் சுற்றி வழி விடப்பட்டிருக்கிறது. மேல் இடம் 45 அடி நீளம் உடையது. 25 அடி அகலம் உடையது 26 அடி உயரம் உள்ளது. இதன் தூண்கள் சிங்கத் தூண்கள்.