பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

79



பல்லவர்க்கே உரிய தனிச் சிற்பமாகும். துர்க்கை தன் வாகனமான சிங்கத்தின்மீது அமர்ந்து, எருமைத்தலை கொண்ட அசுரன்மீது அம்புகளைப் பொழிகின்றாள். அவளைச் சுற்றிலும் அவளுடைய படைவீரர் நிற்கின்றனர். அவ்வாறே அசுரனைச் சூழ அவனுடைய வீரர் நிற்கின்றனர். இப்படைகள் இருத்தல் இக்காட்சியைச் சிறப்பிக்கின்றது. இக்காட்சியை அமைத்த சிற்பிகள் கூரிய அறிவும் சிற்பத்திறனும் வாய்க்கப்பெற்றவர்கள் என்பதில் ஐயமில்லை.

கோவர்த்தன மலை

தனிப்பாறைகள் மீது செதுக்கப்பட்டுள்ள காட்சிகள் சில, நரசிம்மவர்மன் காலத்தன என்று அறிஞர் கருதுகின்றனர். அவற்றுள் ஒன்று கண்ணன் கோவர்த்தன மலையை எந்திக் கோபாலரையும் பசுக்களையும் காக்கும் காட்சியாகும். மலையைத் த்ாங்கியுள்ள கண்ணனும் அவன் பக்கத்தில் நின்றுள்ள பலராமனும் பெரியவராகக் காட்டப்பட்டுள்ளனர். மற்றவர் உருவிற். சிறியவராகக் காண்கின்றனர். அம்மக்களுடைய கவலைகொண்ட முகமும் சிறிது தெளிவுற்ற மனநிலையும் நன்கு காட்டப்பட்டுள்ளன. இவ்வுருவங்கட்கு இடையே ஆயர் வாழ்க்கையைக் குறிப்பிடும் சில காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கறவைக்காட்சி, ஒருவன் பால் கறக்கிறான்; பசு தன் கன்றை நக்குகிறது. இந்தச் சிற்ப வேலைப்பாடு தெளிவாகவும் அழகாகவும் அமைந்துள்ளது.