பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

81



மஹாமல்லபுரம்

மஹாமல்லன் என்ற நரசிம்மவர்மன் தன் பெருநாட்டுக் கடற்றுறைப் பட்டினமான மல்லையைப் புதுப்பித்து, அதற்கு மஹாமல்லபுரம் என்று தன் பெயரிட்டான். அப்பெயர் நாளடைவில் சிதைந்து ‘மஹாபலிபுரம், மாவலிவரம்’ எனப் பலவாறு வழங்குகின்றது. மஹாபலிக்கும் இந்நகரத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது அறியத்தக்கது.


10. மஹாமல்லன் ஆட்சி

கட்டடப் பிரியன்

மஹாமல்லனான நரசிம்மவர்மன் கட்டடங்கள் அமைப்பதில் பேரவாக் கொண்டவன். அவன் சிறந்த வைணவன் ஆதலின், தந்தை எடுப்பித்த குடைவரைக் கோவில்களுக்கு அண்மையிலேயே பெருமாள் கோவில்களைக் குடைவித்து மகிழ்ச்சி கொண்டான் மல்லையை, மஹாமல்லபுரம் என்று பெயரிட்டுப் புதுக்கி அமைத்தான். அஃது அவனது ஆட்சியில் முதல்தரமான கடற்றுறைப் பட்டினமாக விளங்கியது: பல்லவர் கடற்படை தங்குவதற்கேற்ற வசதிபெற்று இருந்தது. மஹாமல்லன் பல் இடங்களிற் கோட்டைகளைக் கட்டினான். அவற்றுள் ஒன்று பல்லவப் பெருநாட்டின் தென்கோடியில் அமைந்திருந்தது. திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் உள்ள லால்குடியை அடுத்துப் பெருவள நல்லூர் இருக்கின்றது. அதனை அடுத்துப்பல்லவரம் (பல்லவ புரம்) என்னும் சிற்றுார் உள்ளது. அங்குள்ள பாறைமீது நரசிம்மவர்மன்