பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

7



பல்லவர் யாழ்ப்பாணத்தவர்

“யாழ்ப்பாணம் என்பது இலங்கைத் தீவிற்கு வடக்கே உள்ள கூரிய நீண்ட நிலப்பகுதியாகும். அஃது இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கிச் செல்பவர்க்கு ஒரு ‘போது’ (போத்து-அரும்பு) போலக் காணப்படும்போது, போத்து, பல்லவம் என்பன ஒரு பொருட் சொற்கள். யாழ்ப்பாணம்- ‘போது, போத்து, பல்லவம்’ எனப்படின், அங்கிருப்பவர் ‘போத்தர், பல்லவர்’ எனப்படுவர் அல்லவா? ஆகவே, பல்லவர் என்ற பெயருடன்’ தமிழ்நாட்டை ஆண்டவர் யாழ்ப்பாணத்தவரே ஆவர்.” என்பது பிறிதொருசார் ஆராய்ச்சியாளர் கருத்து.[1]

பல்லவர் - ஆந்திரர்

“வடபெண்ணையாற்றுக்கு அப்பாற்பட்டநாட்டை ஆந்திரப் பேரரசரான சாதவாஹன மரபினர் ஆண்டு வந்தனர். அவர்கள் கங்கை யாறுவரை பரவி இருந்து தங்கள் நாட்டைப் பல மாகாணங்களாக வகுத்து, ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதிகாரி ஒருவரை நியமித்தனர். அம்முறையில் கிருஷ்ணையாற்றுக்கும் வடபெண்ணை யாற்றுக்கும் இடைப்பட்ட மாகாணத்தைப் பல்லவர் என்ற மரபினர் ஆண்டுவந்தனர். அவர்கள் ஆந்திரப் பேரரசு அழிந்த கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தங்கள் மாகாணத்திற்குத் தாங்களே உரிமை பெற்ற அரசர்கள் ஆனார்கள். அவர்கள் தெற்கில் தங்கள் நாட்டை விரிவாக்க விரும்பிச் சோழர்க்குச் சொந்தமான் தொண்டை நாட்டை ஏறத்தாழக் கி.பி. 300- இல் கைப்பற்றினர். அவர் மரபினரே மஹேந்திரவர்மன் முதலிய பிற்காலப் பல்லவர் ஆவர்,” என்பது வேறொருசார் ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.[2]


  1. Mysore gazetteer.
  2. Dr. S.K. Aiyangar Pallavas of Kanchi (by R. Gopalan).