பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

97



இக்குறிப்புகளை மாமல்லப்புரத்தில் உள்ள சிம்மவிஷ்ணு, மஹேந்திரவர்மன் இவர் தம் உருவச் சிலைகள் கொண்டு உணரலாம். பல்லவ அரசர் ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கே பெற்றவர்கள். மஹேந்திர்வர்மன் சிறந்த வடமொழிப் புலவன்: நூலாசிரியன், இசையாசிரியன், சிற்பம், ஒவியம் போன்ற நாகரிகக் கலைகளை வளர்த்தவன். நரசிம்மவர்மன் சிறந்த வைணவ பக்தன், செங்கோல் அரசன். மஹேந்திரன் அறிவு, ஆண்மை, அரசியல் முறை இவற்றில் ஒரளவும் குறையாமல் நரசிம்மவர்மன் பெற்றிருந்ததைக் காணில், இளவரசர் இளமையில் நல்ல முறையில் தக்க பயிற்சி பெற்று வந்தனர் என்பது அறியப்படும். அவர்களை ஈன்ற அரச மாதேவியர் கல்வி, ஒழுக்கம், சமயப்பற்று முதலியவற்றிற் சிறந்திருந்தனர் என்பது வெளியாகும்.

பல்லவர் இலச்சினை

சேரனுக்கு இலச்சினை வில்; சோழற்குப் புலி, பாண்டியற்கு மீன் சாளுக்கியர்க்குப் பன்றி. இவ்வாறே பல்லவர்க்கு நந்தி இலச்சினை ஆகும். கொடியும் நந்திக் கொடி நாணயங்களும் நந்தி முத்திரை கொண்டவை. சில் முத்திரைகளில் நந்திமீது லிங்கம் பதியப் பட்டுள்ளது. இதனால், பல்லவரது அரசியல் சமயம் சைவ சமயம் என்பது பெறப்படும். தனிப்பட்ட முறையில் பல்லவ அரசர் வைணவராகவோ, சமண ராகவோ இருக்கலாம். அரசாங்க முத்திரை கொண்ட ஒலை நந்தி முத்திரையோடுவிடப்பட்ட ஒலை ஆகும்.

அமைச்சர்

பல்லவ அரசருக்கு உதவியாக இருந்து அரசியல் நடத்தலில் அமைச்சர் சிறந்த பங்கு கொண்டிருந்தனர்.