பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

பல்லவர் வரலாறு



சிம்மவிஷ்ணு வேறு அரசருடன் போர் செய்தமைக்கு உரிய சான்றுகள் கிடைத்தில. ஆதலின், இவன் தென்னாட்டு அரசருடன்றான் பெரும்போர் செய்து வென்று, காவிரியாறு வரையுள்ள தமிழ்நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது. இவனுக்கு முற்பட்ட நந்திவர்மன் முன்னோரும் இவருடைய முன்னோரும் காஞ்சியில் இருந்தமைக்குரிய சான்று இன்மையாலும், அவர்கள் அனைவரும் ஆந்திர நாட்டிலிருந்தே பட்டயங்களை வெளியிட்டிருத்தலாலும், இரண்டாம் குமார விஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினன் எனக் கூறலாலும், அவன் ஒருவனே காஞ்சியி லிருந்து பட்டயம் விடுத்ததாகத் தெரிவதாலும் இடைக்காலப் பல்லவர் ஆட்சியில் காஞ்சிபுரம் வாகாடகரிடமிருந்து மீட்கப்பெற்ற பின்னரும் கைமாறியதோ என்று எண்ண வேண்டுவதாக இருக்கிறது. இந்தச் சிம்ம விஷ்ணுவுக்கு முற்பட்டவர் காஞ்சியில் இருந்திலர் என்பதாலும், சிம்ம விஷ்ணு ஒருவனே சோழர் களப்பிரர் முதலிய தென்னாட்டரசரை வென்று காவிரியாறு வரை பல்லவப் பேரரசை நிறுத்தினான் என்பதனாலும், இவனது ஆட்சித் தொடக்கத்தில் சாளுக்கியப்போர் இன்மையாலும், இவன் காலத்தில் காஞ்சி களப்பிரரிடமிருந்து[1] கைப்பற்றப்பட்டது என்று நினைக்கலாம். காஞ்சியைக் கைப்பற்றாமல் இவன் காவிரிவரையுள்ள நாட்டைப் பிடித்துக் காஞ்சியைத் தலை நகராகக்கொண்டு அரசாளுதல்


  1. களப்பிரர் இவரைப்பற்றி முன்னரே கூறப்பட்டுள்ளது. இவர் தொண்டைநாட்டில் ஒரு பகுதியையும் சோழ நாட்டின் பெரும்பகுதியையும் ஆண்டு வந்தனர்.
    சோழர் - களப்பிரர் ஆட்சிக்குப்பட்டும் படாமலும் சிறிதளவு நிலப் பாகத்தை ஆண்டவர். இவர்நிலைமை கி.பி.880 வரை இங்ஙனமே இருந்தது. இவர் தலைநகரம் உறையூர்.
    மழவர் இவர்கள் மழ (மலை) நாட்டினர்; ‘மலாடர்’ என்றும் கூறப்படுவர். இவர்கள் திருக்கோவலூர் முதலிய மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர். மெய்ப்பொருள் நாயனார் மலாடர் (மழவர்) அரசர் ஆவர்.
    பாண்டியருள் கி.பி. 250-550 வரை களப்பிரர்க்கு உட்பட்டுக் கிடந்த பாண்டிய நாட்டை மீட்ட கடுங்கோன் அல்லது அவன் மகன் மாறவர்மன் அவனி சூளாமணி சிம்ம விஷ்ணுவை எதிர்த்திருக்கலாம்.