பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
82
பல்லவர் வரலாறு


இங்குக் ‘கற்றவர் கூட்டம்’ என்பது காஞ்சிமா நகரைக் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. ‘காஞ்சியைக் கைப்பற்றியதால் சிம்மவிஷ்ணு கற்றவரைப் பகைவரிடமிருந்து காப்பாற்றினான்’ என்று மேற்கூறிய வடமொழி நூல் கூறுகின்றது.[1]

கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர்ப் பட்டயத்தில் ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’[2] என்பது காணப்படுகிறது. மேலும், சிம்மவிஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் புதுக்கோட்டைச் சீமையில் உள்ள சித்தன்ன வாசலில் குகைக் கோயில் அமைத்துள்ளான். அவன் தமிழ்நாட்டின் எப்பகுதியை யாயவது பிடித்தான் என்பதற்குச் சான்றில்லை. அவன் காலத்தில் தென்னாட்டில் போரே இல்லை. ஆதலின் புதுக்கோட்டை வரையுள்ள சோழநாட்டைச் சிம்ம விஷ்ணுவே வென்று அடிப் படுத்தினவன் ஆவான்.[3]

தமிழ் வேந்தருள் மலவர் (மலையர்) என்பவர் மலாடு என்னும் நாட்டினர். மலாடு தென் ஆர்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கோவலூர் முதலிய இடங்களைக் கொண்ட நடுநாடாகும். இந்நடு நாட்டினர் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலும் சிற்றரசராக இருந்தமை தெளிவு. சிம்ம விஷ்ணுவோடு போர் செய்த தமிழ் வேந்தருள் மலாடரும் சேர்ந்தனர் என்பதில் வியப்பில்லை.

‘சிம்ம விஷ்ணு’ என்னும் பெயரைக் கொண்டே இவன் வைணவன் என்பதை நன்குணரலாம். இரண்டாம் நந்திவர்மன் காலத்திய உதயேந்திரப் பட்டயம் இவனைப் ‘பக்தி ஆராதித்தவிஷ்ணு-சிம்ம விஷ்ணு’[4] என்று குறிப்பிடுதலை நோக்க, இவன்


  1. Heras’s Studies in Pallava History, p.20.
  2. திருவொற்றியூரை அடுத்த மணல் என்னும் கிராமம் அக் காலத்தில் ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’ என்றே பெயர் பெற்றிருந்தது. 211 ணிஞூ 1912.
  3. Ibid.p.21.
  4. S.I.I. Vol., p.74.