பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிம்ம விஷ்ணு

85



சிம்மவிஷ்ணு வைணவன் ஆதலால் இவன் உருவச்சிலை ஆதிவராகர் கோவிலில் இருத்தல் வியப்பன்று. ஆனால், முதலில் சமணனாகவும் பிறகு வைவனாகவும் மாறிய மகேந்திரவர்மன் சிலை அங்கு இருத்தலே எண்ணத்தக்கதாகும். அவன் இளவரசானக இருந்தபொழுதுதன்தந்தையுடன் வைணவக்கோவிலுக்குப்போதல் மரபாக இருந்திருக்கலாம். அவன் பட்டம் பெற்ற பிறகே சமணனாக மாறி இருக்கலாம். எனவே, இக்கோவில் சிம்மவிஷ்ணு காலத்திற்றான் அமைக்கப்பட்டது எனக் கோடல் பொருத்தமானதே.[1]

சிம்மவிஷ்ணு கலைவல்லவன்

சிம்மவிஷ்ணு அவையிற் சிறந்த புலவராக இருந்தவர் வடமொழி வல்லுநரான தாமோதரர் எனப் பெயர் கொண்ட பாரவி என்பவர். இவர் எங்ஙனம்பல்லவன் அவையை அடைந்தார் என்பதை இவர் மரபில் வந்த தண்டி என்னும் வடமொழிப் புலவர் தமது அவந்தி சுந்தரி கதையில் வரைந்துள்ளார். அது கீழ் வருமாறு:

“தென் நாட்டில் பல்லவப் பேரரசனான சிம்மவிஷ்ணு ஆண்டு கொண்டிருந்தான். அவன் புலவர்க்குப் புரவலனாக இருந்தான். ஒருநாள் புதியவன் ஒருவன் அவன் அவைக் களத்திற்கு வந்து, நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய பெருமாள் துதி ஒன்ற்ை வடமொழியிற் பாடினான். அச் செய்யுளில் இருந்த சொல்லழகும் பொருள் அழகும் அரசனை ஈர்த்தன. உடனே அவன் பாடகனை நோக்கி, ‘இதனைச் செய்தவர் யாவர்?’ என்று ஆவலோடு கேட்டான். பாடகன், ஐயனே, வடமேற்கே ஆரியநாடு என வரும் ஒரு நாடு உண்டு. அதில் அனந்தபுரம் என்பது ஒர் ஊர். அஃது ஆரிய நாட்டின் தலைமணி ஆகும். அப்பதியில் கெளசிக மரபிற் பிறந்த பிராமணர் சிலர் இருந்தனர். அவர்கள் அதனை விட்டு அசலபுரத்திற்[2] குடியேறினர். அப் பிராமணருள் ஒருவர் நாராயணசாமி என்பவர்.


  1. Dr. S.K. Aiyangar’s “The Antiquities of Mahabalipuram, p.31
  2. அசலபுரம் நாசிக் என்பதற்கருகில் உள்ளது. கி.பி. 614இல் விஷ்ணுவர்த்தனன் அப்பகுதியை இளவரசனாக இருந்து ஆண்டான்.