பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
88
பல்லவர் வரலாறு


படையெடுப்பு

புலிகேசி படையெடுப்பைப் பற்றி, மேற்சொன்ன அய்ஹொளே கல்வெட்டு, “அழுக்கற்றவெண்சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும் குடைகளையும் பிடித்துக் கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பின துளியானது எதிர்க்க வந்த பல்லவ வேந்தன் ஒளியை மங்கச் செய்தது. புலிகேசியின் பெரும் படைக் கடலைக் கண்டு காஞ்சி அரசன் காஞ்சிபுரக் கோட்டைக்குள் புகுந்து கொண்டான்”[1] என்று கூறுகிறது. இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வெளியிட்ட காசக்குடிப் பட்டயம், ‘மகேந்திரன் தன் பகைவரைப் புள்ளலூரில் அழித்தான்’ என்று குறிக்கிறது.[2]

காசக்குடிப் பட்டயம் சாளுக்கியர் பெயரைக் குறிப்பிடாவிடினும், வரலாற்று ஆசிரியர் அனைவரும் ‘பகைவர்’ என்றது சாளுக்கியரை என்றே கொண்டுள்ளனர். எனவே, காசகுடிப்பட்டயத்தில் கூறியுள்ள செய்தி மகேந்திரன்-புலிகேசி போரேயாகும் என்பதில் ஐயமில்லை.

இப்பட்டயங்களில் ஒவ்வொன்றும் தன் அரசன் வென்றதாகவே கூறுகிறது. ‘இஃது எங்ஙனம் பொருந்துவது’ என்பதே ஆராயத்தக்கது: புலிகேசியினது பட்டயத்தில், ‘பல்லவ அரசன் ஒளிந்துகொண்டான்’ என்பது கூறப்பட்டுள்ளதே அன்றி, அவன் தோற்றது அல்லது காஞ்சியைச் சாளுக்கியர் கைப்பற்றியது குறிக்கப்படவில்லை. மேலும், புலிகேசியினது ஆட்சியில் பல்லவநாடு அவன் கைப்பட்டதாகவும் தெரியவில்லை. மேற்கூறிய சாளுக்கியன் கல்வெட்டு, “துள்ளிவிழும் கயல்மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனது யானைகளின் மதநீர் விழுந்ததால் ஒட்டம் தடைப்பட்டுக் கடலிற்கலக்க இயலாதாயிற்று. புலிகேசியும் பல்லவப் பணியைப் போக்கும் கடுங் கதிரவனாய்ச் சேர சோழ பாண்டியரைக் களிப்புறச் செய்தான்” என்று கூறுகிறது. இதனால்


  1. Epigraphia Indica, VI, p. 11 143.
  2. S.I.I. II, p.356.