பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகேந்திரவர்மன்

99


செதுக்கப்பட்டுள்ளன. இச் சிற்றுளி வேலைப்பாட்டைக் கண்டு வியவாத ஆராய்ச்சி அறிஞர் இல்லை. “இக் கோவிலை ‘சத்யசந்தன், சத்ருமல்லன், குணபரன்’ என்னும் விருதுகள் பூண்ட அரசன் அமைத்தான்.” என்று இங்குள்ள கல்வெட்டுக் குறிக்கிறது.

(10) நாமக்கல் மலைக்கோவில்

இங்குள்ள அரங்கநாதன் மலைக்கோவில் மகேந்திரன் அமைத்தாகும். இங்குள்ள பள்ளிகொண்டபெருமான் உருவம் சிறந்த செதுக்கு வேலை வாய்ந்தது. இதுபோன்ற வேலைப் பாடு உலகில் எங்குமே இல்லை என்னலாம். கோவிலும் அற்புத அமைப்புப் பெற்றது. முன் மண்டபத்துக்கு வெளியிடம் மூங்கிலால் செய்த தாழ்வாரத்தைப் போல மலையைக்குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழகையும் வேலைத்திறத்தையும் நேரிற் காண்பவரே உணர்வர் எழுத்தால் உணர்தலோ - உணர்த்தலோ இயலாது! இயலாது!! கோவிற் சுவர்களில் திருமால் அவதாரக் கதைகள் அழகொழுகும் சிலைகள் வாயிலாக உணர்த்தப்பட்டுள்ளன.[1]

இதுகாறும் கூறிவந்த செய்திகளால் கீழ் வருவனவற்றைச் சுருக்கமாக உணரலாம்:

1. உள்ளறையில் லிங்கம் வைத்த கோவில்கள் பல. அந்த லிங்கங்கள் உருண்டை வடிவின; பட்டை வடிவின அல்ல.

2. வாயிற்காவலர் நேர்ப்பார்வை உடையவர். அவர் கையை உயர்த்தி வணக்கம் தெரிவிப்பவராக அல்லது தடிமீது கைவைத்தவராக இருப்பர்.

3. தூண்கள் எல்லா இடங்களிலும் சதுரத் தூண்களாகவே இருக்கின்றன. கீழும் மேலும் நான்கு முகங்களையும் இடையில் எட்டு முகங்களையும் உடையன. சதுரப் பகுதிகள் தாமரை மலர்களைக் கொண்டிருக்கும்.


  1. P.T. Srinivasa Iyengar’s “Pallavas’ PII,pp.9,10.