பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
101
மகேந்திரவர்மன்


அமைப்புகளையே ஒத்துள்ளன. ஒருவர் கையில் தடியும், மற்றவர் கையில் வில்லும் இருக்கின்றன. ஆனால் இருவரும் முன்புறம் நோக்கியே இருத்தல் கவனித்தற்குரியது. பிற்காலப் பல்லவர் அமைத்த வாயிற்காவலர் உருவங்கள் பக்கங்களில் பார்வையைச் செலுத்தியபடி இருத்தலைக் காணலாம். கொடிக்கால் மண்டபக் கூரையைத் தாங்கியுள்ள கற்றுண்கள் இரண்டும் மகேந்திரவர்மன் காலத்து வேலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இறை உறை உட்கோவிலின் தரை, மண்டபத்தரையை விட இரண்டடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுகளை உடையது. முதற் படிக்கட்டு மகேந்திரவாடியில் உள்ள கோவிற் படிக்கட்டைப்போல அரைமதி அளவினதாக இருக்கின்றது. இவ்விரண்டு கோவில்களின் எல்லாக் குறிப்புக்களையும் ஒத்திட்டுப் பார்ப்பின், இவை இரண்டும் ஒரே அரசன் காலத்தில் குறிப்பிட்ட கல் தச்சரைக் கொண்டே அமைக்கப் பட்டவை என்பது தெளிவாகும்.[1]

“மகாபலிபுரத்தில் மகேந்திரன் காலத்துக் கோவில்களே இல்லை. எல்லாம் அவன் மகனான நரசிம்மவர்மன் என்னும் மகாமல்லன் அமைத்தவையே என்று ஆராய்ச்சியாளர் பலர் நன்கு ஆராயாது கூறிவிட்டனர். பல்லாவரத்திலிருந்து புதுக்கோட்டை வரை பல இடங்களில் குகைக் கோவில்களை அமைத்த மகேந்திரவர்மன், காஞ்சிக்கு அண்மையில் உள்ள மகாபலிபுரத்தைக் கவனியாது இருந்திருத்தல் முடியுமா என்பதை அவர்கள் எண்ணிப்பார்த்திலர். இதுகாறும் கூறிய ஒப்புமைச் செய்திகளால், தருமராசர் மண்டபமும் கொடிக்கால் மண்டபமும் மகேந்திரன் காலத்தன என்பதை நன்குணரலாம் அன்றோ?[2]

இக் கோவில்கட்கு மூலம்

கிருஷ்ணையாற்றங் கரையில் விதுகொண்டாவைத் தலை நகரமாகக் கொண்டு கி.பி. 450-620 வரை ஆண்டவிஷ்ணு குண்டர் என்னும் மரபினர் பெசவாடா, மொகல்ராசபுரம், உண்டவல்லி,


  1. Longhurst, “Archaeological Survey of India, Memoir No.33, pp.10-13.
  2. Heras’s “Studies in Pallava History’,pp.77,78.