பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
102
பல்லவர் வரலாறு


சித்தநகரம் முதலிய இடங்களில் குகைக்கோவில்களை அமைத்தனர். அவர்கள் நாடு கி.பி. 610க்குப் பிறகு சாளுக்கியர் ஆட்சிக்குட்பட்டதால், அவர் தம் கோவில்கள் சிலவே ஆயின. அக் கோவில்களை மகேந்திரவர்மன் பார்த்து மகிழ்ந்தவன் ஆதலின், அவற்றைப் போலவே தன் நாட்டிலும் பல குகைக் கோவில்களை அமைத்தான்.[1] திருச்சிராப்பள்ளி, வல்லம், மாமண்டூர் முதலிய இடங்களில் உள்ள குகைக் கோவில்கள் உண்டவல்லியில் உள்ள குகைக் கோவில்களைப் போலவே அமைக்கப்பட்டவையாகும்.[2] கிருஷ்ணையாற்றங்கரையில் உள்ள குகைக்கோவில்களைப் பார்த்த பிறகு மகேந்திரன் அமைத்த முதல் குகைக்கோவில்- சுண்ணாம்பு, செங்கல் முதலியன இல்லாமல் அமைத்ததமிழ் நாட்டு முதற் குகைக் கோவில் - மண்டபப் பட்டில் உள்ள கோவிலே ஆகும். இவனுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தில் கற்கோவில்கள் இல்லை என்பது இவனது மண்டபப்பட்டுக் கல்வெட்டால் நன்கறியலாம். சாருதேவி காலத்துப் பெருமாள் கோவிலும், இரண்டாம் கந்தவர்மன் காலத்துத் திருக்கழுக்குன்றக் கோவிலும் மண்ணாலும் மரத்தாலும் கட்டப்பட்டவை. ஆதலால், அவை அழிந்துபோயின. என்றும் அழியாமல் இருக்கத்தக்க நிலையில் கோவில்களைக் கற்களைக் கொண்டு- பாறைகளைக் கொண்டு-மலைகளைக் குடைந்து அமைத்த பெருமை மகேந்திரவர்மனுக்கே உரியதாகும். தமிழ்நாட்டு ஒவிய சிற்பக் கலைகட்குக் கற்கள் வாயிலாகப் புத்துயிர் தந்து நிலைக்கச் செய்தவன் இப்பெருந்தகையே ஆவன்.[3]

மகேந்திரன் கல்வெட்டுகள்

இப்பேரரசன் கல்வெட்டுகளுள் பெரும்பாலன இவன் அமைத்த கோவில்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டே இவன் வரலாறு, சமயம், திருப்பணி முதலியவைபற்றி அறிய இடம் உண்டாகிறது. ஆதலின் அவற்றுட் சில காட்டாக ஈண்டுத்தருதும்:


  1. Durbruell’s “The pallavas’, p.35.
  2. R. Gopalan’s “Pallavas of Kanchi’ p.161.
  3. Heras’s “Studies in Pallava History’, p:81,82.