பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
106
பல்லவர் வரலாறு


இந்நூல் மெய்ப்பிக்கிறது. இது, கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல சமயத்தாரும் தனிப்பட்ட நிலையில் வாழ்க்கை நடத்தியதை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. காபாலிக சமயத்தவன் ஒருவன் ஒழுக்கம் கெட்ட காபாலினி[1] ஒருத்தியுடன் குடித்து மயங்கிக் கிடத்தல், அப்பொழுது அவன் கையில் இருந்த காபாலத்தை (பிச்சைப் பாத்திரம்) ஒரு நாய் கவர்ந்து செல்லல், அதனை அறியாத காபாலிகள் அவ்வழியே சென்ற பெளத்த துறவியை மறித்துப் பூசல் இடல், இப் பூசலைத் தீர்க்க ஒழுக்கம் கெட்ட பாசுபத சமயத்தான் ஒருவனைக் காபாலிகள் அழைத்தல், இறுதியில் வெறியன் ஒருவனிடமிருந்து காபாலத்தைப் பெறுதல் ஆகிய செய்திகளை விளங்கக் கூறும் சிறுநூலே மத்தவிலாசப் பிரகசனம் என்பது. இந்நூலில் மகேந்திரன் சிறப்பும்-சத்ரு மல்லன், அவநிபாஜனன், குணபரன், மத்த விலாசன் என்னும் விருதுப்பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இதனால் அறியப்படுவன

மகேந்திரவர்மன் காலத்தில் பெளத்தம், காபாலிகம், பாசுபதம் முதலிய சமயங்கள் இருந்த நிலையை இச் சிறு நூல் நன்கு விளக்குகிறது. (1) பிராமணனுக்குப் பூணுல் எத்துணைச் சிறந்ததோ அத்துணைச் சிறந்தது காபாலிகனுக்குக் காபாலாம். அவன் அதனை இழந்தால் குறித்த காலத்திற்குள் அதனை அடைந்து தீரவேண்டும் என்பது விதி. அவன் தன் உடம்பெங்கும் சாம்பல் பூசிப் பார்வைக்கு அருவருப்பாக இருப்பான், மண்டை ஒட்டில் மதுவை அருந்துவான். அவன் மாட்டுக் கொம்பொன்றையும் ஏந்தித் திரிவான்; வழிபாட்டின் போது அதனை ஊதுவான். அதனில் நீர் அருந்துவான். காபாலிக ஆடவர் காபாலிகப் பெண்டிருடன் கள்ளங் கவடில்லாமல் பழகி வந்தனர். (2) பெளத்த துறவிகள் ஊன் உண்டுவந்தார்கள்; பல பெளத்தப் பள்ளிகளை (விகாரங்களை) நடத்திக் கொண்டு இன்பமாகக் காலங்கழித்து வந்தனர்; தங்கள் சமயக் கட்டளைகளை


  1. சாதவாகனர் காலத்திலும், காபாலினியர் தெலுங்க நாட்டில் இருந்தனர் & Dr. K.Gopalachari’s “Early History of the Andhra Country,’ p.123.