பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நரசிம்மவர்மன்

109



பட்டயங்களையே விரிவாகக் கூறுகின்றன. சாளுக்கியர் பட்டயங்களில் இவை ஒருவாறு குறிப்பிடப் பட்டுள்ளனவே அன்றித் தெளிவாக இல்லை.

(2) கூரம் பட்டயங்கள் கூறுவது-கீழ் மலையிலிருந்து கதிரவனும் திங்களும் தோன்றினாற்போல இப் பல்லவர் மரபில் வந்தவனும் - வணங்காமுடி மன்னர்தம் முடிமேல் இருக்கும் சூடாமணி போன்றவனும் - தன்னை எதிர்த்த யானைக் கூட்டத்திற்குச் சிங்கம் போன்ற வனும்-நரசிங்கப்பெருமாளே தோன்றினாற்போல வந்தவனும்-சேர. சோழ, பாண்டிய, களப்பிரரை அடிக்கடி முறியடித்தவனும்-பல நூறு போர்கள் புரிந்தவனும்-பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடத்துப் போர்களிற் புலிகேசி தோற்று ஓடியபொழுது ‘வெற்றி’ என்னும் மொழியை அவனது முதுகாகிய பட்டயத்தின்மீது எழுதினவனும் ஆகிய நரசிம்மவர்மன்.......”[1] என்பது.

(3) உதயசந்திரமங்கலப்பட்டயங்கள் கூறுவது:'நரசிம்மவர்மன் அகத்தியனைப் போன்றவன்; அடிக்கடி வல்லப அரசனை (சாளுக்கியனை)ப் புரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடத்துப் போர்களில் வென்றவன் வாதாபியை அழித்தவன்”[2] என்பது.

(4) வேலூர் பாளையப் பட்டயங்கள் கூறுவது: “விஷ்ணுவைப் போன்ற புகழுடைய நரசிம்மவர்மன் தன் பகைவரை அழித்து, வாதாபியின் நடுவில் தன் வெற்றித்துணை நாட்டினான்”[3] என்பது.

பல போர்கள்

முதல் இரண்டு பட்டயங்களிலும் போர் நடந்த இடங்கள் முறைப்படி குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கப்பால் வேறு இடங்களிலும் போர் நடந்துள்ளது. எனினும், முதல் மூன்றே குறிப்பிடத்தக்கவை. இம்மூன்று இடங்களில் மணிமங்கலம் ஒன்றே


  1. S.II. Vol. I p. 152.
  2. Indian Antiquary, Vol. VIII, p.227.
  3. S.I.I. Vol.II p.508.