பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
113
நரசிம்மவர்மன்


சாளுக்கியருடைய நகரைச் சூறை ஆடி யானைகளைச் செலுத்தி நகரைப் பாழாக்கி, சாளுக்கியருடைய கரிகளையும் பரிகளையும் செல்வத்தையும் கவர்ந்து சென்று நரசிம்மவர்மன் முன் வைத்தார் என்பதும் தெளிவாதல் காண்க. இச் செய்தியால், நரசிம்மவர்மன் மணிமங்கலம் முதலிய இடங்களில் சாளுக்கியனை வென்ற பிறகு காஞ்சிக்குத் திரும்பிவிட்டான் என்பது தெளிவாகிறது.அவன் சென்ற பிறகு, பரஞ்சோதியார் பல்லவ சேனையுடன் புலிகேசியின் படையைத் தொடர்ந்துசென்று, ஆங்காங்கு நடந்த சிறியபோர்களில் தோற்கடித்து, இறுதியில் வாதாபியுள் நுழைந்தார்; பல்லவன் ஆணைப்படி, கற்கம்பத்தில் அவனது பெருவெற்றியைக் குறித்து மீண்டார் என்பனவற்றை நன்குணரலாம்.

சாளுக்கியர் பட்டயச்சான்று

இரண்டாம் புலிகேசியின் மகனான முதலாம் விக்கிரமாதித்தனது கர்நூல் பட்டயம், “இரண்டாம் புலிகேசி பகைவர் மூவரால் தோல்வியுற்றான். வாதாபியில் இருந்த கோவில்கள் வருவாயின்றித் தவித்தன.....” என்று கூறுகின்றது. இந்த விக்கிரமாதித்தன் மகனான விநயாதித்தனது சோரப்-பட்டயம், “சாளுக்கியர் மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவரே பொறுப்பாளிகள்,”[1] என்று முறையிடு கின்றது. இவ்விரண்டு பட்டயங்களாலும், வாதாபி கொண்ட செயல் பிற்பட்ட சாளுக்கியரை எந்த அளவு வருந்தச்செய்துள்ளது என்பதை நன்குணரலாம். -

வாதாபி கொண்டவன்

புலிகேசி, வாதாபி படையெடுப்புக்குப்பின் என்ன ஆயினன் என்பது தெரியவில்லை. அவனைப்பற்றிய பிற்செய்தி ஒன்றுமே தெரிய வழி இல்லை ஆதலின், அவன் போரில் இறந்தனனோ என்பது நினைக்கவேண்டுவதாக இருக்கிறது. இங்ஙனம் சாளுக்கியர் தலைநகரம் நாசமுற-சாளுக்கியர் பிற்காலத்திலும் தன் செயலை எண்ணி எண்ணி வருந்தச்செய்த தனது வீரச் செயலை நினைத்து,


  1. Indian Antiquary, Vol.XIX, pp.151, 152.