பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
116
பல்லவர் வரலாறு


ஆக்கினான் என்று ‘நகர்’ - கல்வெட்டுக் கூறுகிறது. இதனால், துர்விநீதன் நரசிம்மவர்மனை வென்று, தன் பெயரனான விக்கிரமாதித்தனைச் சாளுக்கிய அரசனாக்கினான் என்பது தெரிகிறது.

உண்மை என்ன?

விக்கிரமாதித்தன் தன் பாட்டன் உதவியை நாடினான். அதை அறிந்த ஆதித்தவர்மன் வேறு வழியின்றி நரசிம்மவர்மனது துணையை நாடி இருக்கலாம். நரசிம்மன் சாளுக்கியர் அரசியலில் விசேடக் கவனம் செலுத்தாமல், வந்தவனுக்கு உதவியாக ஒரு படையை அனுப்பி இருக்கலாம். அப்படையைத் துர்விநீதன் முறியடித்து வெற்றிபெற்றிருக்கலாம், நரசிம்மனால் அனுப்பப்பட்ட படையை வென்றமையால், பாவம்! துர்விநீதன் பேரரசனான நரசிம்மவர்மனையே நேரில் வென்றதாகக் கருதி மகிழ்ந்து, தன் மகிழ்ச்சியைக் கல்வெட்டிலும் காட்டிவிட்டான் என்று கோடலே ஈண்டைக்குப் பொருத்தமாகும். ஏனென்றால், நரசிம்மனையே பெரும் போரில் வென்றவனாயின், துர்விநீதன் அதன் பயனாகக் கொங்கு நாட்டைக் கைப்பற்றி இருத்தல் வேண்டும்; அவன் தான் அங்ஙனம் செய்ததாகக் குறிக்கவில்லை. துர்விநீதன் வெற்றியால் பல்லவர்க்கு எந்தவிதமான குறைவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை; பல்லவர் பட்டயங்களில் இவனைப் பற்றிய பேச்சே இல்லை.

இலங்கைப் போர் 1

நரசிம்மவர்மன் காலத்தில் இலங்கைப் பட்டத்திற்கு உரிய மானவன்மன் என்னும் இளவரசன் காஞ்சிக்கு வந்தான். அவன் அட்டதத்தன் என்பவனால் துரத்தியடிக்கப்பட்டவன். அட்டதத்தன் மானவன்மனது அரசைக் கவர்ந்தவன். செயலற்ற மாணவன்மன் நரசிம்மனை அடைக்கலம் அடைந்தான்; அவனுடன் இருந்து பணிவுடன் எல்லா வேலைகளையும் செய்து பல்லவன் நன்மதிப்பைப் பெற்றான். அதனாற்றான் மாணவன்மனைக் காஞ்சியில் விட்டு நரசிம்மவர்மன் புலிகேசியை எதிர்க்கச் சென்றான்.