பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

பல்லவர் வரலாறு



காஞ்சியைச் சுற்றியுள்ள நாட்டைத் திராவிடம் என்று குறிப்பிட் டுள்ளான். “நிலம் செழிப்புள்ளது. நல்ல விளைவு தருவது; நாடு வெப்பமானது. மக்கள் அஞ்சா நெஞ்சினர்; உண்மைக்கு உறைவிட மானவர் கற்றவரையும் உயர்ந்த கொள்கைகளையும் மதிப்பவர். இந்நாட்டில் 100 சங்கிராமங்கள்[1] இருக்கின்றன; பதினாயிரம் பெளத்தத் துறவிகள் இருக்கின்றனர். சைவ, வைணவ, சமணக் கோவில்கள் ஏறத்தாழ 80 இருக்கின்றன. திகம்பர சமணர் பலர் திராவிட நாட்டில் இருக்கின்றனர். புத்தர் காஞ்சிக்கு வந்து பலரைப் பெளத்தராக்கியதாக இந்நாட்டில் கூறப்படுகிறது.அசோகன்திராவிட நாட்டில் பல தூபிகளை அமைத்தான். அவற்றுள் சில காஞ்சியைச் சுற்றிலும் பழுதுற்ற நிலையில் இருக்கின்றன. நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் சிறந்த பேராசிரியராக இருந்த தர்மபாலர் காஞ்சிப்பதியினர் என்னும் செய்தி இங்குக் கூறப்படுகிறது. “நான் பாண்டிய நாட்டையும் சென்று கண்டேன்.[2] அங்குச் சிலரே உண்மைப் பெளத்தராக இருக்கின்றனர். பலர் பொருள் ஈட்டுவதிலேயே ஈடு பட்டுள்ளனர். பாண்டிய நாட்டில் பெளத்தம் அழிநிலையில் உள்ளது. பல இடங்களில் பெளத்த மடங்கள் இருந்தமைக் குரிய அறிகுறிகள் தென்படுகின்றன.” என்று அந்த வழிப்போக்கன் தன் குறிப்புப் புத்தகத்தில் வரைந்துள்ளான். மேலும் அவ்வறிஞன், “காஞ்சி ஆறு கல் சுற்றளவுடையது. அது கடற்கரைநோக்கி இருபது கல் விரிந்துள்ள நகரம் ஆகும். இங்கிருந்து பல கப்பல்கள் இலங்கைக்குப் போகின்றன.” என்று கடல் வாணிபச் சிறப்பையும் விளக்கி யுள்ளான்.[3]

குகைக் கோவில்கள்

நரசிம்மவர்மன் தன் தாதையைப் போலவே கோவில்கள் அமைப்பதில் பேரவாக் கொண்டவன். இவன் முதலில்


  1. சங்கிராமம் - பெளத்த மடங்கள்.
  2. இவன் பாண்டியநாடு சென்றபோது நெடுமாறன் அரசு கட்டில் ஏறினான் & Vide TVS Pandarathar’s Pandyas p.14.
  3. Beal, Records Vol.II p.118.