அடக்கியவன். அவன் சாளுக்கிய அரசனது பகைமையாகிய இருளை அழிக்கும் பகைவனாக இருந்தான்,”[1] என்பது.
ஆராய்ச்சி
இருதிறத்தார் பட்டயங்களும் வெற்றி ஒன்றையே குறித்தல் காண முடிவு கூறல் கடினமாக இருக்கின்றது. ஆயினும், இரண்டு சிறப்பு மொழிகளை இங்குக் காணல் வேண்டும்: (1) சாளுக்கியர் காஞ்சியைக் கைப்பற்றியது:
(2) பல்லவர் பெருவள நல்லூரில் சாளுக்கியரைத் தோற்கடித்தது. இரண்டும் உண்மையாகவே இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இவை இரண்டும் ஒரே படையெடுப்பில் வெவ்வேறு காலத்தில் உண்டானவை எனக் கொள்ளின் உண்மை புலனாகும்.
விக்கிரமாதித்தன் முதலில் பல்லவனைத் தோற்கடித்துக் காஞ்சியைக் கைப்பற்றினான். பிறகு நேரே (‘கத்வல்’ பட்டயம் கூறுமாறு) சோழ நாட்டில் உள்ள உரகபுரத்தை (உறையூரை)[2] அடைந்து தங்கினான், பல்லவர் பட்டயம் கூறும் பெருவள நல்லூர் திருச்சிராப்பள்ளிக்கு 12கல்தொலைவில் உள்ளது. எனவே,அஃது உறையூருக்கும் அண்மையதே ஆகும். விக்கிரமாதித்தன் தோல்வியூற்ற இடம் பெருவள நல்லூர் ஆகும். எப்பொழுதும் தான் தோற்ற செய்தியை எந்த அரசனும் தன் பட்டயத்தில் கூறான் அல்லவா? ஆதலின், காஞ்சியை இழந்ததாகப் பல்லவர் பட்டயங்கள் கூறவில்லை. பெருவள நல்லூரில் தோற்றதாகச் சாளுக்கியர் பட்டயங்கள் கூறவில்லை. இங்ஙனம் காணின், முதலில் வெற்றி கொண்ட சாளுக்கியன் முடிவில் இழிவான தோல்விபெற வேண்டியவன் ஆயினான் என்பது பெறப்படும்.
போர் நடந்த முறை
இப் போரைப்பற்றிச் சிறந்த அறிஞரான ஈராஸ் பாதிரியார் பின்வருமாறு கூறுகிறார்: “பல்லவர் படை வழக்கம் போலக் காஞ்சிக்கு அண்மையிலேயே இருந்திருக்கலாம்; சாளுக்கியர் படை