பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
144
பல்லவர் வரலாறு


(பகைவருடைய பொருளைப்போரில் கைப்பற்றுபவன்); வீரத்தில் மகேந்திரனை ஒத்தவன் திடீரென இடிக்கும் இடிபோன்றவன் பல இடங்களை வென்றவன் போரில் களைப்படையாதவன்; செருக்கரை அடக்குபவன்...”[1] என்றெல்லாம் குறிக்கப்பட்டுள்ளன. இவனது வீரம், போர்த்திறம் பற்றி மேலும் பல கூறப்பட்டுள்ளன.

போரே செய்யாத ஒருவனைப்பற்றி இத்துணைத் தொடர்கள் வர இடமில்லை அன்றோ? இத் தொடர்களை நோக்க, இவன் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களில் ஈடுபட்டுத் தன் வீரத்தையும் பொறுமையையும் காட்டி வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பதுதானே போதரும். ஆகவே, இராசசிம்ம பல்லவன். யாருடன் போரிட்டான் என்பதைக் கவனிப்போம்.

போரிட்டவன் விநாயதித்தனே

முதலாம் விக்கிரமாதித்தன் கி.பி.674-5இல் பரமேச்சுரவர்மனால் பெருவளநல்லூரில் முற்றிலும் முறியடிக்கப்பட்டான். அவன்தன் காலத்தில் மறுமுறை பல்லவனைத் தாக்கவில்லை. அவன் தான் நடத்திய போரில் தன் மகனை உடன் கொண்டதாகவும் தெரியவில்லை. ஆதலின் அவன் தன் இறுதிக் காலத்தில், தனக்குப் பின் பட்டம் பெற இருந்த தன் செல்வ மைந்தனை, தான் பெற்ற பெருந் தோல்விக்குப் பல்லவரைப் பழிவாங்குமாறு கட்டளை யிட்டிருக்கலாம். சிறந்த வீரர் பிறந்த மரபில் வந்த விநயாதித்தன், தந்தை கட்டளையை நிறைவேற்றச் சமயம் பார்த்திருந்தான்; தன் தந்தையைப் படுதோல்வி உறச்செய்த பரமேச்சுவரன் இறக்குந்தனையும் பொறுத்திருந்தான். என்னை? பரமேச்சுரன் காலத்தில் சாளுக்கியரது இரண்டாம் போர் இன்மையின் என்க. பரமேச்சுரன் இறந்து, இராசசிம்மன் கி.பி.690 இல் அரசன் ஆனதும், தன் தந்தை கட்டளைப்படி விநயாதித்தன் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான் என்று கோடலே பொருத்தமாகும்.


  1. SII vo Nos 24.25, etc.