பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
145
இராசசிம்மன்


இது தனிப்பட்ட போர்

விக்கிரமாதித்தன் முதலில் தன் மகனைப் படையுடன் அனுப்பினான். அவனுக்குப்பின் தானும் ஒரு படையுடன் வந்தான். காஞ்சியை முற்றுகையிட்டு வென்றான் என்று இருவர் செயல்களும், கி.பி. 674 இல் நடந்ததாகக் கோடலே நன்று. ஏனெனின், இராசசிம்மன் காலத்தில் சாளுக்கிய பல்லவர் போர்நடந்ததாகத் தெரியவில்லை ஆதலால் என்க என்று குறித்தனர் ஓர் ஆசிரியர்.[1] இருவர் செயல்களும் ஒரே காலத்தில் நடந்திருக்குமாயின், அவை சாளுக்கியர் பட்டயங்களில் விளக்கமாக இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அங்ஙனம் பெறாமை நன்கு ஆராயத்தக்கது. மேலும், தோற்ற அரசன் தன் மைந்தற்குக் கட்டளையிட்டுத் தம் மரபின் சிரவிழிற்கு ஈடுசெய்யத் தூண்டினான் எனக்கோடலே பொருத்தமானது. மேலும் தன் தந்தையும் பெருவீரனுமான இரண்டாம் புலிகேசியைப் பல இடங்களில் தோற்கடித்த பல்லவர் படையை எதிர்க்க, போர் அனுபவமே இல்லாத தன் மகனை விக்கிரமாதித்தன் முதல் முதல் அனுப்பினான் என்பதே பொருந்துவதாக இல்லை. அவனே பெரும்படைதிரட்டிக் கொண்டு தக்கவாறு வந்தான் என்றெண்ணுதலே நேர்மையானது. இங்ஙனம் தந்தை வந்த பிறகு, தந்தையின் கட்டளைப்படி பல்லவர் முதலியோரை அடக்கி அமைதியை நிலைநாட்ட விநயாதித்தன் வந்தான் என்னல், அவனை முதலில் அனுப்பினான் என்று கூறியதைவிட பொருத்த மற்றதாகும். தன் தந்தையான புலிகேசி பல்லவரால் அவமானம் அடைந்து இறந்தான் நாடு பாழாயிற்று: தானும் முயன்று இறுதியில் அவமதிப்பே பெற்றான். இந்த மனப்புண்ணினால் மடிந்த விக்கிரமாதித்தன் வீர உணர்ச்சித்தும்பப் ‘பல்லவரைப் பழிக்குப்பழிவாங்குவது உனது கடமை எனக் கட்டளையிட்டு இறந்தான் எனக் கொள்வதே பல்லாற்றானும் சிறப்புடையதாகும். இதனாற்றான், விநயாதித்தன், ‘தந் தந்தை கட்டளைப்படி’ பல்லவன் மீது படையெடுத்தான்.


  1. Heras’s “Studies in Pallavas History’ pp.48–50.