பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
150
பல்லவர் வரலாறு


உக்கிரண்டனுக்குச் சுப்பிரமணியன் போன்ற ‘அத்யந்தகாமன்’ என்னும் பல்லவ அரசன் பிறந்தான். இவன் சைவ நெறியில்[1] நடந்து மலத்தை எல்லாம் ஒழித்தவன்; இந்தக் காலத்தில் தேவரைக் கண்டவன் துஷ்யந்தன் முதலானோர் வான் ஒலி கேட்டதில் வியப்பில்லை. நற்குணம் பறந்தோடிப் போன இக்காலத்தில் அவ் வான் ஒலியை ஸ்ரீபரன் (இராசசிம்மன்) கேட்டது வியப்பே. இவன், ‘கலி’ என்னும் மகரம் குடிகளை விழுங்கியபோது அவர்களைக் காத்தவன். இவன் பரந்து கிடக்கும் இச் சிவன் மந்திரத்தை (கோவிலை)க் கட்டினான். இஃது இவன் புகழைப் போலவும் நகையைப் போலவும் இருக்கின்றது. பாம்பரசனை அணியாகக் கொண்டவனும் தேவ அசுர கணங்கள் போற்றுபவனும் ஆகிய சங்கரன், இந்த இராசசிம்ம, பல்லவேச்சுரத்தில் நெடுங்காலம் குடிகொண்டு இருக்கட்டும். இடபத்தை அடையாளமாக உள்ளவன் இந்தக் கோவிலில் காட்சி கொடுப்பானாக. ரணசயனும், ஸ்ரீபரனும், சித்ரகார்முகனும், சிவ சூடாமணியுமாகிய பேரரசன் நெடுங்காலம் உலகத்தைக் காப்பானாக. இவன் சைவசித்தாந்தப்படி நடப்பவன்; மகாதேவனுக்கு அடியவன்.”[2]

ரணசயன்

இவனுக்கு இப்பெயர் எப்படி வந்தது? இவன் சிற்றரசனாக இருந்தபொழுது நடந்த விக்கிரமாதித்தன் படையெடுப்புப் போரில், தந்தைக்கு உதவியாக இருந்து சில இடங்களில் நடந்த போரில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அந்த உரிமை கொண்டே ரணரசிகனான விக்கிரமாதித்தனை வெற்றி கொண்டதால், தன்னை ‘ரண சயன்’ என்று கூறிக்கொண்டான் போலும்? இங்ஙனமே, நெல்வேலிப் போரில் தன் தந்தையான நெடுமாறனுக்குத் துணையாகச் சென்ற கோச்சடையன் (சடிலவர்மன்), தான் விக்கிரமாதித்தனை வெற்றிகொண்ட சிறப்பு நோக்கித் தன்னை ‘ரணதீரன்’ என்று கூறிக்கொண்டிருக்கலாம். இங்ஙனம் பொருள் கொள்ளின் வரலாற்று முறையில் இடர்ப்பாடின்மை அறிக.

  1. Ibid.p.12
  2. SII vol I p. 20.