பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
152
பல்லவர் வரலாறு


கோவில்கள்

இராசசிம்மன் கட்டிய கயிலாசநாதர் கோவிலைப்பற்றி இப்பகுதியின் இறுதியில் விளக்கமாகக் கூறுவோம். இங்கு இவன் கட்டிய பிற கோவில்களைப் பற்றிக் கவனிப்போம்: மாமல்லபுரத்தில் இப்பொழுதுள்ள கடலோரத்துக்கோவில் இவன் கட்டியதே யாகும். அங்கு இராசராசசோழன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில், “கரையோரம் மூன்று கோவில்கள் இருக்கின்றன. அவை முறையே “கூடித்திரிய சிகாமணிப் பல்லவேச்சுரம், இராசசிம்ம பல்லவேச்சுரம், பள்ளிகொண்டருளிய தேவர் கோவில் என்பன” என்பது காணப்படுகிறது. முதல் இரண்டும் கடலுள் ஆழ்ந்து கெட்டன போலும் இவற்றைக்குறிக்க இரண்டு, பலிபீடங்களும் ஒரு கற் கொடிமரமும் இன்றும் இருக்கின்றன. கடலை நோக்கியபடி சிவலிங்கம் ஒன்று இருக்கின்றது. அது கூடித்திரிய சிகாமணிப் பல்லவேச்சுரத்தில் இருந்ததாம். இரண்டாம் கோவிலும் சிவன் கோவிலாம். இப்பொழுது பலி பீடந்தான் இருக்கிறது. அதைச்சுற்றிலும் இராசசிம்மன் விருதுகள் காணப்படுகின்றன.[1] மூன்றாம் கோவிலே இப்பொழுது இருப்பது. அதுவே திருமங்கையாழ்வாரது பாடல் பெற்ற சலசயனம் ஆகும். சலசயனப் பெருமாள் என்பதற்கு நீர் அருகில் பள்ளிகொண்டுள்ள பெருமான் என்பதுபொருள் ஆகும். இங்ஙனமே தரையில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் தல சயனம் எனப்படும். இக்கோவிலையும் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.[2] இக்கோயில் பிற்காலத்தில் விசயநகர மன்னரால் புதுப்பிக்கப்பட்டது.


  1. R .Gopalan’s “Pallavas of Kanchi,” p.110 and Eq-Report No.961 of 1913, pp.88-89.
  2. ‘சலசயனம், தலசயனம்’ என்பவற்றின் பொருள் தெரியாமல் ஈராஸ் பாதிரியார், ‘மல்லைத்தலசயனம் என்பது மகாபலிபுரத்தின் பழைய பெயர்’ என்று தமது ஆராய்ச்சி மிக்க நூலில் (பக். 70) தவறாக எழுதிவிட்டனர். இதனை மறுத்துத் தமிழ்நாட்டிற் சிறந்த கல்வெட்டறிஞராகவுள்ள திரு. இ.௵.இராமச்சந்திஞ் செட்டியார், ஆ.அ.ஆ.ஃ.அவர்கள் விளக்கமாக எழுதியுள்ளார் & Q.J.M.S. Vol.27.Nos. land 2.