இந்தியக் கோவில்களில் இங்ஙனம் காணப்படல் இதுவே முதன் முறையாகும், வராக மண்டபக்குன்றின் மீதுள்ள ஒலக்கண்ணேசுவரர் கோவிலும் இராசசிம்மன் காலத்ததேயாகும். மாமல்லபுரத்திற்கு வடக்கே மூன்று கல் தொலைவில் சாளுவன் குப்பத்தில் உள்ள (1) புலிகக்குகை[1] (2) அதிரண சண்டன மண்டபம் என்பன இக்காலத்தனவே ஆகும். மாமல்லபுரம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்த காலத்தில் இக் குப்பம் அதனைச் சேர்ந்த பகுதியாக இருந்திருத்தல் வேண்டும். புலிக்குகையில் ஒன்பது புலிகள் (சிங்கங்கள்?). வாயைத் திறந்தவண்ணம் குகையின் முகப்பில் செதுக்கப்பட்டுள்ளன. இதில் எந்தத்தெய்வத்தின் சிலை (துர்க்கை?) வைக்கப்பட்டதென்பது தெரியவில்லை. இதன் தோற்றம் விநோதமாக இருக்கின்றது. இரண்டாம் மண்டபம் சிவனுக்கு அமைந்த குகைக்கோயில் ஆகும். அது பேரளவில் மகேந்திரன் காலத்து அமைப்பைக் கொண்டதாகும். இவை இரண்டும் அண்மையில் இருப்பதால், ஒரே அரசன் காலத்தனவாகக் கொண்டனர் அறிஞர். புலிக் குகையில் கல்வெட்டு இல்லை. மண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை அதிரண சண்டன் என்னும் அரசன் பெயரைக் குறிக்கின்றன. இப்பெயர் இராசசிம்மன் கொண்டதாதலால். இக் கல்வெட்டுகள் அவன் காலத்தனவே எனக் கொள்ளல் பொருத்தமாகும்.[2]
விழுப்புரத்திற்கு 16 கல் தொலைவில் உள்ள பனமலையில் இராசசிம்மன் ஒரு கோவில் கட்டியுள்ளார். இதுதவிரக் காஞ்சிபுரத்தில் முன்னர்க் கூறப்பட்ட ஐராவதேச்சுரர்கோவில் இவனாற் கட்டப்பட்டதே ஆகும். இவன் மனைவியான ரங்கபதாகை என்பவள் கயிலாசநாதர் கோவிலுக்கு முன்பு வலப்பக்கமாக உள்ள ஆறுசிறிய கோவில்களில் மூன்றாவதைக் கட்டியுள்ளார்.