பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
156
பல்லவர் வரலாறு


செல்வம் வகுத்தல் செய்தான்’ என்று சேக்கிழார் பெருமான் கூறியது முற்றும் உண்மையே ஆகும்.

இதற்கு எதிரில் ஓர்அழகிய குளமும் நந்தியும் இருக்கின்றன. அவை இரண்டும் இன்றுள்ள கோவில் வாயிலுக்கு ஏறத்தாழ 100 அடித்தொலைவில் உள்ளன. நந்தி பெரியது; கல்லால் ஆயது. அஃது உள்ள மேடை மீது இராசசிம்மனுக்குரிய சிங்கத் தூண்கள் குறைந்து நின்ற வண்ணம் இருக்கின்றன. இவற்றை நோக்க, நந்திக்கு மேல் கற்கூரை இருந்திருத்தல் வேண்டும்என்பது புலனாகிறது. இன்றுள்ள வாசலுக்கு எதிரில் கோவிற் கிணறு ஒன்றும் இருக்கின்றது. கோவிலுக்குப் பின்புறத்திலும் ஒரு கிணறு உள்ளது. இவை இரண்டும் பண்டைக் கிணறுகளே. மேலும் வாயிலை அடுத்து. இன்றுள்ள மதிற் சுவருக்கு வெளியே வலப்பக்கம் இரண்டும் இடப்பக்கம் ஆறுமாக எட்டுச் சிறிய கற்கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் லிங்கங்கள் இருக்கின்றன. இவற்றையும் முன் சொன்னவற்றையும் நோக்க, கோவிலின் வெளிச்சுற்று ஒன்று இருந்திருத்தல் வேண்டும் என்பதும், கோவில் மிகப்பெரியதாக இருந்திருத்தல் வேண்டும் என்பதும் நன்கு புலனாகும்.

இன்றுள்ள கோவிற் பகுதிகள்

கோவில் வாயில் சிறியது. கோவில் நீள் சதுரமாக இருக்கிறது. வாயிலைத் தாண்டியவுடன் எதிரேதனித்துள்ள சிறியகோவில் ஒன்று இருக்கிறது. அதற்கு இருபுறங்களிலும் உட்செல்ல வழிகள் இருக்கின்றன. அவற்றின் வழியாக உட்செல்லின், நீள நாற்கோண (சதுர)க்கோவில் இருக்கின்றது. அதனைச்சுற்றிலும் ஏறத்தாழ ஆறடி அகலுமுள்ள திருச்சுற்று அமைந்துள்ளது. திருச்சுற்றில் உள்ள உட்புறச் சுவர்கள் பல சிறு கோவில்களாகவே காட்சியளிக்கின்றன. இறையிடம், முன்மண்டபம் ஆகிய இரண்டும் சுவர்களை உடையவை. முன்மண்டபத்தைச் சேர்ந்த முற்பகுதி பொதுமுறையான (சாதாரண) மண்டபமாகவே இருக்கிறது. இறையிடத்து உட்சுவர்களிலும் புறச்சுவர்களிலும் சிற்பங்கள் பலவாக