பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்

175



படையை வென்று, அமைதியாகக் காஞ்சிக்குள் நுழைந்தான், சிறிது காலம் கடிகையார், கோவிலார் மனமகிழப் பரிசுகள் தந்து தங்கி இருந்தான். இந்த அளவே சாளுக்கியர் பட்டயங்கள் கூறுகின்றன.

நந்திபுரக்கோட்டை முற்றுகை தீர்ந்ததும், உதயசந்திரன் தமிழரசரைக் குழும்பூர், நெடுவயல் முதலிய பல ஊர்களில் போரிட்டுத் துரத்திச் சென்றான். அப்பொழுது நந்திவர்மன் எங்கு இருந்தான்? என்ன செய்தான்? என்பன இது காறும் விளக்கப்பெறவில்லை. இரண்டாம் விக்கிரமாதித்தன் கி.பி. 723இல் பட்டம் பெற்றவன்: நந்திவர்மன் கி.பி.717இல் பட்டம் பெற்றவன். அவன் பட்டம் பெற்ற போது வயது பன்னிரண்டு ஆதலின், கி.பி 733இல் ஏறத்தாழ 28 வயதுடையவனாக இருந்தான் ஆவன். இப் படையெடுப்பின்போது ஏறத்தாழ 30 வயதெனக் கொண்டாலும் அவன் வீர வயதுடன் விளங்கினான் என்பதில் ஐயமில்லை அவன் தனது 61ஆம் ஆட்சி ஆண்டில் (தனது 72ஆம் வயதில்) வெளியிட்ட கொற்றங்குடி பட்டயத்தில் தான் சிறுவனாக இருந்தபொழுதே சேர. சோழ, பாண்டிய, களப்பிர, வல்லபரை வென்றனன் என்பது பொன்போலக் காணப்படுகிறது.[1] உதயசந்திரன் தென்னாட்டுப் போர் முடிந்தபிறகு வடநாடு சென்று கோதாவரி அருகில் சபர அரசனையும் பிருதுவி-வியாக்கிரன் என்பவனையும் வென்றான் என்று உதயேந்திரப் பட்டயம் கூறுகிறது. அஃது அரசனது 21ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 738இல்) பொறிக்கப்பட்டது. 738இல் வடநாடு செல்லத்தக்கவன்மை பல்லவர் படைத்தலைவர்க்கு எப்படி வந்தது? அங்கு அவன் சாளுக்கியனை வென்றதாகவும் இல்லை.

போர் நடந்த காலம்

இவற்றை எல்லாம் நடுவுநிலையாய் ஆராயின், பல்லவர் பாண்டியர் சாளுக்கியர் போர் விக்கிரமாதித்தன் பட்டம் பெற்ற கி.பி. 733க்கும் உதயேந்திரப் பட்டயம் வெளிவந்த கி.பி. 738க்கும் இடையில் நடந்திருத்தல் வேண்டும் என்பது விளங்கும்.


  1. Ep. Ind Vol.XVIII, pp. 115-120.