பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
177
தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்


சொன்னவாறு வேங்கிப் பகுதியில் இருந்த அரசரை வென்று மீண்டனனாதல் வேண்டும்.

முடிவு

இங்ஙனம் கொள்ளின், (1) பல்லவன் பாண்டியரோடு போர் செய்தபொழுது விக்கிரமாதித்தன் காஞ்சியை எளிதிற் பற்றி அங்கு இன்பமாகக் காலம் கழித்தான்; (2) உதய சந்திரன் தமிழரசரைத் துரத்திக்கொண்டு தெற்கே போன பொழுது, பல்லவன் தன்னிடம் இருந்த படையுடன் விக்கிரமாதித்தனை எதிர்த்துத் துரத்தினான்: (3) அவ்வமயம் விக்கிரமன் மகனான இளவரசன் கீர்த்திவர்மன் பெரும் படையுடன் வந்து பல்லவனைக் காஞ்சியினின்றும் விரட்டிப் பல பொருள்களைக் கைப்பற்றினான். (4) அந் நெருக்கடியான நிலையில் உதயசந்திரன் போந்து கீர்த்திவர்மனைத் துரத்திச் சென்று பல்லவ நாட்டிற்கப்பால் விட்டனன்: (5) உதயசந்திரன் அப்படியே வடக்கே சென்று வேங்கிப் பகுதியில் வெற்றி கண்டு மீண்டனன் என்னும் செய்திகளை முறைப்படி உணரலாம். இதற்கு உதயேந்திரன் கொற்றங்குடி, வக்கலேரிப் பட்டயக் குறிப்புகள் அனைத்தும் செவ்வையாகப் பொருந்தி வருதலையும் காணலாம். அறிஞர் நன்கு ஆராய்வாராக.

படையெடுப்பின் பயன்

விக்கிரமாதித்தன் சிறந்த கலையுணர்வு உடையவன்; அவன் கயிலாசநாதர் கோவிலைக் கண்டு வியந்தான்; அதன் கும்ப அமைப்பை உளங்கொண்டான். காஞ்சியிலிருந்து சிற்பிகளைக் கொண்டு சென்றான் போலும் தன் நாட்டில் கயிலாசநாதர் கோவில் கும்பம் போன்ற கும்பங்களைக் கொண்ட கோவில்களைப் பல்லவர் முறையில் அமைத்தான். அவனுக்குப்பின் அந்நாட்டிற் கட்டப்பட்ட கோவில்களிலும் இப் பல்லவர் முறையைக் கண்டு களிக்கலாம்.[1]


  1. Heras’s studies in Pallava History p.60