பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
188
பல்லவர் வரலாறு


வெட்டுவித்தான். இவனது 5ஆம் ஆட்சி ஆண்டில் புதுக்கோட்டைச்சீமையில் ‘வாலிஏரி’ ஒன்றை இவனுடைய சிற்றரசானன-வாலிவடுகள்-கலிமூர்க்க ‘இள அரையன்’ என்பவன் வெட்டுவித்தான். திருவெள்ளரை என்னும் சிற்றுாரில் ‘மாற்பிடுகு பெருங்கிணறு’ ஒன்றைக் கம்பன் அரையன் என்பவன் வெட்டுவித்தான்[1] திருச்சிராப்பளிக்கு அடுத்த உய்யக்கொண்டான் திருமலைக் கல்வெட்டு, அவ்வூருக்கு அண்மையில் உள்ள வாய்க்காலை ‘வைரமேகன் வாய்க்கால்’ என்கிறது. ‘வைரமேகன்’ என்பது ‘தந்திவர்மன்’ பெயர்களில் ஒன்று அன்றோ? எனவே, அவ் வாய்க்கால் தந்திவர்மன் காலத்தில் வெட்டப்பட்டதே என்னல் பொருந்தும். இவன் காலத்தில் திருவிப்பிரம்பேட்டு ஏரி முதலிய பல ஏரிகள் தூய்மை செய்யப்பட்டன. தந்திவர்மன் ஆட்சியில் நீர்ப்பாசன வசதிகள் சிறப்பாகக் கவனிக்கப்பட்டன என்பது கல்வெட்டுகளால் நன்கு புலனாகின்றது. இவனது காலத்தில் தனிப்பட்ட செல்வர் ஆங்காங்குக்கேணியும் குளமும் எடுத்துள்ளனர்; ஏரிகளைத் தூய்மை செய்துள்ளனர். இஃது உண்மையில் பாராட்டத்தக்க சிறந்த அரசியற் பண்பாகும் அன்றோ?

சில பட்டயங்கள்

இவன் காலத்துக் கல்வெட்டுகள். (1) செஞ்சிக் கோட்டைக்கு அருகில் உள்ள தொந்தூர், (2) உத்தரமல்லூர், (3) திருவல்லிக்கேணி. (4) கூரம். (5) மலையடிப்பட்டு, (6) திருவெள்ளரை, (7) ஆலம்பாக்கம் (8) குடிமல்லம் முதலிய ஊர்களில் கிடைத்துள்ளன. இவற்றுள் திருவல்லிக்கேணிக் கல்வெட்டைக் காண்க. அது ‘குலங்கிழார்’ (கோவில் அதிகாரி) கோவில் நிலத்தில் ஒரு பகுதியை ஒற்றிவைத்து, அதன் வருமானத்தில் 45 காடி நெல் குறைந்து போனதால், அதற்குப் பதிலாக 30 காடி நெல்லும் 5 கழஞ்சு பொன்னும் புகழ்த்துணை விசையரசன் தானம் செய்தான். இதற்கு நாள் ஒன்றுக்கு 5 நாழி நெல் வட்டியாகும். அதை அரிசியாக்கி நாள்தோறும் திருவமுது படைப்பாராக. என்பது. இந்த வட்டிக்


  1. இவை இந்நூலின் பிற்பகுதியில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.