பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

பல்லவர் வரலாறு



இதனால் அவன் கங்கனைப் பெண்கொடுத்து உறவு கொண்டாற் போலப் பல்லவனையும் பெண்கொடுத்து உறவுகொண்டான் என்பது உய்த்துணரப்படுகிறதன்றோ?

இத்தகைய திருமண முறையால், அரசியல் அறிஞனான அமோகவர்ஷன் பல்லவனையும் கங்கனையும் உறவினராக்கிக் கொண்டான்; விந்தமலைக்குத் தென்பால் பகைவர் இன்றி இன்பமாகத் தன் காலத்தைக் கழித்தான்.[1]

பல்லவர்-பாண்டியர் போர்

மூன்றாம் நந்திவர்மன் செய்த போர்களில் தெள்ளாற்றுப் போர் ஒன்றையே சிறப்பாக இவன் காலத்தார் கருதினர் போலும் இவனும் அங்ஙனமே கருதினான்.இஃது உண்மை என்பதை இவனுடைய 10ஆம் ஆட்சி ஆண்டுக்குப் பிற்பட்ட எல்லாக் கல்வெட்டுகளும் கூறுகின்றன. தெள்ளாற்று எறிந்த நந்திவர்மன் என்றே இவன் அவற்றிற் குறிக்கப்படுகிறான். அங்ஙனம் அது சிறந்தது என்பதைக் கலம்பகமும் கூறுகின்றது. அந்நூலில் தெள்ளாற்றுப் போர் பல பாக்களில் குறிக்கப்பட்டுள்ளது.[2] அக்காலத்தில் வாழ்ந்து ‘பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் என்பவர்,

“வன்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்
உண்மையால் பாரான் உரிமையா- திண்மையால்
தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோ(டு)
யார்வேந்தர் ஏற்பார் எதிர்”

என்று பாடிப் புகழ்ந்துள்ளார். எனவே, பட்டயக் குறிப்புகளாலும் மேற்சொன்ன இலக்கியச்சான்றுகளாலும், “தெள்ளாற்றுப் போர் மிகப் பெரியதும் கொடியதும் இன்றியமையாததும் ஆனது” என்பது நன்கு விளங்குகின்றது. இனி இப் போரில் தொடர்பு கொண்டவர் யாவர் என்பதைக் காண்போம்.


  1. Ibid, pp.84-85.
  2. நந்திக்கலம்பகம், செய்.28, 29, 33, 38, 42, 49, 52, 53, 63, 71, 75, 77, 79, 80, 85, 86.