பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
198
பல்லவர் வரலாறு


(கோட்டைக்குள்) ஒளிந்தனர். பல்லவன் அங்கும் அவரை முறியடித்து மீண்டான் என்று நந்திக்கலம்பகம் (செ. 4) நவில்கின்றது.

இப் போருக்குக் காரணம் என்ன?

(1) இராட்டிரகூடர்க்குப் பல்லவன் திறை கொடுத்த மறுத்து அவன்மீது போர்தொடுத்து வென்றாற்போலச்சோழன் மறுத்திருக்க வேண்டும். அவற்குத்துணையாகப் பாண்டியன் முதலியோர் போரிட வந்திருத்தல் வேண்டும். பல்லவ நாட்டை, நந்திவர்மன் இல்லாத காலத்திற் கைப்பற்ற முனைந்திருத்தல் வேண்டும்.

(2) இவனிடம் பொறாமை கொண்டு பட்டம் பெற விழைந்த இவன் தம்பி பகைவருடன் சேர்ந்துகொண்டமை ஒரு காரணமாகும்.

இந்த இரண்டும் உண்மை என்பதைக் கீழ் வருவனவற்றால் அறியலாம்:-

(1) “உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா
மன்னவரே மறுக்கம் செய்யும்
பெருமையாற் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றாம் அன்றே”[1]
(2) ‘தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக
வென்ற தலைமான விரதுவசன்
செம்பியர் தென்னார் சேரர் எதிர்வந்து
மாயச் செருவென்ற பாரி முடிமேல்...”[2]

பல்லவன்-காவிரி நாடன்

இங்ஙனம் தமிழ்வேந்தர் முற்றும் முறியடிக்கப்பட்டபின் காவிரி நாடான சோணாடு, பழையபடியே பல்லவர் கைப்பட்டது. இதனை நந்திக் கலம்பகத்தாலும் நந்திவர்மன் கல்வெட்டுக்களாலும் நன்கறியலாம். கலம்பகத்துப் பாக்கள் பல (செ.17,28,57,58,86)


  1. சுந்தரர் தேவாரம்.
  2. நந்திக்கலம்பலம் செ.81.