பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
206
பல்லவர் வரலாறு


திருப்புறம்பியப் போர்[1]

சீமாறன் சீவல்லபன் மகனான இரண்டாம் வரகுணன் (கி.பி. 862. 880) ஏறத்தாழக் கி.பி. 880இல் பல்லவர்மீது படையெடுத்தான். இவன் கி.பி. 868இல் திருவதிகையில் உள்ள கோவிலுக்குத் தானம் செய்தாக நிருபதுங்கனது 18ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் கூறுகின்றது.[2] இதனால், இவன் நிருபதுங்களிடம் முதலில் நண்பனாக இருந்தான் என்பதை நன்கறியலாம். இவன் படையெடுத்தபோது நிருபதுங்கன் முதியவன் ஆதலின், இளவரசனான அபராசிதனே போருக்குச் சென்றான். அவனுக்குத் துணையாக அவனின் பாட்டனும் கங்க அரசனுமான முதலாம் பிருதி வீபதி என்பவன் தன் படையுடன் சென்றான். இந்த நிலையில் விசயாலயன் (கி.பி. 850-870) மகனான ஆதித்தசோழன் (கி.பி. 870 - 907) பல்லவருடன் சேர்ந்து கொண்டான். இம் மூவரும் பாண்டியனைத் திருப்புறம்பியம் (கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது) என்னும் இடத்தில் எதிர்த்துப் பொருதனர். கடும்போர் நடைபெற்றது. அதில் பிருதிவீபதி இறந்தான்.[3] ஆயினும், பாண்டியன் தோற்று ஓடினான். அபராசிதன் வெற்றி பெற்று மீண்டான். எனினும் அவனுடன் இருந்த ஆதித்த சோழனே நன்மை அடைந்தவன் ஆனான். அவன் சோழநாடு முழுவதும் தனதாக்கிக் கொண்டான். பின்னர்க் கி.பி.882இல் நிருபதுங்கன் இறந்தவுடன்,


  1. இப்போர் அபராசிதன் ஆட்சியில் நடந்ததாக இதுவரை வரலாற்று ஆசிரியர் வரைந்து வந்தனர். ஆயின் அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை நோக்க, இப் போர் நிருபதுங்கள் காலத்திலேயே நடந்தது’ என்பது உறுதிப்படுகிறது. ஆதலின் இஃது இங்குக் குறிக்கப் பெற்றது. 1. “The Chronology of the Latter Pallavas” - Mr. M.S. Sarma’s article on in Ramamurthi Pantulu Commemmoration Vol. p. 142. 2. Mr. M.S. Sarma’s Note on Nirupatunka J.O. O.R. Vol.VIII part 2, p.165.
  2. No. 360 of 1931.
  3. இப்போரில் இறந்த முதலாம் பிருதிவீபதியின் கோவில் ஒன்றும் உதிரம் படிந்த தோப்பு ஒன்றும் திருப்புறம்பியத்தில் இன்றும் இருக்கின்றன. TVS Pandarathar’s “Pandyar Varalaru'p.34.