மகாதேவியார் 108 கழஞ்சு பொன் திரு ஆலங்காட்டுக் கோவிலுக்கு அளித்தார்.[1] நந்திநிறைமதி என்பார் ஒருவர் கூரம் கைலேசுரவரர்க்குத் திரு அமுதுக்காக 11 கழஞ்சு பொன் கொடுத்தார்.[2] ஒருவர் திருக்கோவிலுர் திருவீரட்டானேசுவரர் கோவிலில் நந்தாவிளக்கு எரிக்க 12 கழஞ்சு பொன் அளித்தார்.[3] பல்லவ அரசியார் ஒருவர் திருக்கடை முடி மகாதேவரது கோவிலுக்குப் பொன் அளித்ததாகத் திருச்சன்னம் பூண்டிக் கல்வெட்டுக் கூறுகிறது.[4] ஒருவர் திருக்கண்டியூர்க் கோவிலுக்கு நிலம் அளித்தார்.[5] ஒருவர் திருத்தவத்துறை (லால்குடி)யில் உள்ள சப்தரிஷிசுவரர் கோவிலில் விளக்குக்காகவும் திரு அமுதுக்காகவும் பொன் அளித்தார்.[6] அப் கண்டி பெருமானார் என்பவர் திருமுக்கூடல் வெங்கடேசரி பெருமாள் கோவிலுக்குப் பொன் தானமாக உதவினார். அதனை ஊர் அவையார் ஏற்று நடத்த ஒருப்பட்டனர்.[7] ஒருவர் ‘அவனி நாராணச் சதுர்வேதி மங்கலம்’ எனப்படட் காவேரிப்பாக்கம் வரதராசப் பெருமாள் கோவிலுக்குப் பொன் தந்துள்ளார்.[8] இங்ஙனம் நிருபதுங்கன் ஆட்சியில் நடைபெற்ற கோவில் அறப்பணிகள் பல ஆகும். பழந்தமிழர் காலத்துப் பாடல் பெற்ற கோவில்கட்கும் பல்லவ வேந்தர் புதிதாக்க கட்டிய கோவில்கட்கும் இவன் காலத்தில் செய்யப்பட்ட திருப்பணிகள் பலவாம்.
இக்குறிப்புகளால், நாயன்மார், ஆழ்வார் இவர்தம் பாடல் பெற்ற தலங்களுக்கு அக்காலத்திலே இருந்த மதிப்பு நன்கறியலாம்: சிறப்பாக அப்பொழுதிருந்த தமிழ் மக்களின் சமயப் பற்றும் வெள்ளிடை மலைபோல் விளக்கமுறும்.