பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

பல்லவர் வரலாறு



பல்லவ மரபினர்

கம்பவர்மன் என்பவனைக் குறிக்கும் கல்வெட்டுகள் வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் இருபதுக்குமேல் கிடைத்துள்ளன. சிலர் இவன் நிருபதுங்கனுடன் பிறந்தவனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இவன் காலத்தில் ஒலக்கூர் என்னும் இடத்தில் போர் ஒன்று நடந்துள்ளது. அங்கு இறந்த வீரன்பொருட்டு வீரக்கல் நடப்பட்டுள்ளது. அஃது, அந்த ஊர் அழிவுற்றபோது போரிட்டு இறந்தவனது வீரக்கல் என்பது தெரிகிறது.கம்பவர்மன் அறங்கள் பல செய்துள்ளான்.

சந்திராதித்தன் விசய நரசிம்மவர்மன், விசய ஈசுவரவர்மன் என்பவர் தம் கல்வெட்டுகள் சிலவும் கிடைத்துள்ளன. இவர் அனைவரும் நிருபதுங்கள் காலத்தில் கோட்டங்கட்குத் தலைவர் களாக இருந்த பல்லவ அரச மரபினர் என்று அறிஞர் கருதுகின்றனர்.

பிற்காலப் பல்லவர்

பிற்காலத்தில் நுளம்ப-பல்லவர் என்பவர். பல்லாரிக்கோட்டமும் மைசூரின் ஒரு பகுதியும் சேர்ந்த நுளம்ப பாடியைக் கி.பி. 13ஆம் நூற்றாண்டுவரை ஆண்டு வந்தனர். அவர்கள் ஆதித்த சோழன் வழிவந்த பேரரசர்களுடன் ஓயாது போர் நடத்திவந்தனர்; பலர் சிற்றரசராகியும் அரசாங்க அலுவலாளராகியும் இருந்தனர். அவர்கள் இங்ஙனமே மேலைச் சாளுக்கியரிடமும் வேலை பார்த்தனர். அவர்கள், ‘காஞ்சிப் பல்லவர் மரபினர்’ என்று தம்மைக் கூறிக்கொண்டனர். ஆதலின், காஞ்சியில் பல்லவர் ஆட்சி ஒழிந்தவுடன், பல்லவ அரச மரபினர் தமது பழைய இடத்திற்குச் சென்று, குறுகிய நிலப்பகுதியை ஆளலாயினர் என்பது தெரிகிறது.[1] வேறு பலர் சோழப் பேரரசிற் கூடலூர், சேந்த மங்கலம் முதலிய இடங்களில் சிற்றரசராகவும் தானைத் தலைவராகவும் வளநாட்டுத் தலைவர்களாகவும் இருந்து வந்தனர்.


  1. L. Rice’s “Mysore and Goorg from Inscriptions’ pp.55-59.