பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

பல்லவர் வரலாறு



மேய்த்துக்கொண்டு அங்குக் காலம் கழித்தனர்; அவர்களே தங்கள் நாட்டை 24 கோட்டங்களாக வகுத்தனர்; காவிரிப் பூம்பட்டினத்து வணிகருடன் கடல் வாணிபம் நடத்தினர். பிற்காலத்தில் ஆதொண்ட சக்கரவர்த்தி என்பவன் இக் குறும்பரை வென்று குறும்பர் நாட்டைக் கவர்ந்து, அதற்குத் தொண்டை மண்டலம் எனப் பெயரிட்டனன்”, என்று செவிவழிச் செய்தி கூறுகின்றது.[1]

கரிகாலன்: ஆனால், தமிழ்நூல்கள், கரிகாற்சோழன் அந்நாட்டைக் கைப்பற்றினான் என்றும், பின்னர்த் தொண்டைக்கொடியால் சுற்றப்பட்டுக் கடல் வழி வந்த நாகர் மகள் மகனான இளந்திரையன் ஆண்டதால் ‘தொண்டை மண்டலம்,’ எனப் பெயர்பெற்றது என்றும் கூறுகின்றன. இரண்டாம் குலோத்துங்கச் சோழனிடம் உயர் அலுவலாளராக இருந்த தொண்டைமண்டல அறிஞரான சேக்கிழார் பெருமான், வல்லார்வாய்க் கேட்டணர்ந்த செய்தி ஒன்றைக் கூறியுள்ளார். அஃதாவது: ‘கரிகாலன் இமயம் செல்லும் பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக்காஞ்சிநகரத்தின் வளமையைக் கூற, அப் பேரரசன் அந்நகரத்தைத் தனதாக்கிக் குன்றுபோன்ற மதிலை எழுப்பிப் பலரைக்குடியிருத்தினன்,’ என்பது[2] முதற்குலோத்துங்கன் காலத்து நூலாகிய சமயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியும் ஏறக்குறைய இங்ஙனமே கூறுகின்றது. இங்ஙனம் வரும்செய்திகளில் ஒரளவு உண்மையேனும் இருத்தல் வேண்டும் அன்றோ? சோழ மன்னருள் கரிகாலன் ஒருவனே ஈடும் எடுப்பும் அற்ற பெருவீரனாக இருந்தான் என்பது இலக்கியமும் பட்டயங்களும் கண்ட உண்மை, பிற்காலத்தெலுங்க நாட்டுச்சோழரும் தம்மைக் ‘கரிகாலன் மரபினர்’, என்று கூறிக்கொண்டனர்[3] என்பதிலிருந்து, கரிகாலன் ஆட்சி ஆந்திரநாடுவரை பரவி இருந்தது தெளிவன்றோ? அந்தச் சோழ மரபினர் ‘எங்கள் முன்னவனான கரிகாலன், தான் வென்ற


  1. R.Gopalan’s Pallava of Kanchi, pp.26.27
  2. திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செ.85
  3. K.A.N.Sastry’s Cholas Vol.pp.121, 122.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/24&oldid=516146" இலிருந்து மீள்விக்கப்பட்டது