பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
222
பல்லவர் வரலாறு


ஆண்ட அவையினர். ஒரு நாட்டிற்கு உட்பட்ட எந்தச் சிற்றுரைப் பற்றிய செய்தியிலும் இம்முத்திறத்தாகும் கலத்தேதங்கள் கருத்தைத் தெரிவித்து வந்தனர் என்பது தெரிகிறது. ‘ஊற்றுக் காட்டுக் கோட்டத்து நாட்டாரும் காண்க.’ “திருமுகம் கண்டு. நாட்டோம் நாட்டு வியவன் சொல்லிய எல்லை போய், பதாகை வலம் செய்து கல்லும் கள்ளியும் நாட்டிக் கொடுத்ததற்கு எல்லை”[1] எனவரும் பட்டயக் குறிப்புகளைக் காண்க. பல்லவ மல்லன் விடுத்த பட்டத்தாள் மங்கலப் பட்டயத்தில், ‘நாட்டார்க்கு விட்ட திருமுகம் நாட்டார் பொழுது தலைக்கு வைத்து எல்லை போய்க் கல்லும் கள்ளியும் நாட்டிப் பதாகை வலம்செய்து நாட்டார் விடுத்த அறை ஒலைப்படி.... என வருதல் காண்கையில் (1) அரசன் விடுத்தது திருமுகம் என்பதும், (2) நாட்டார் அதனை நிறைவேற்றிப் பொது மக்கட்கு அறிவிப்பது அறை ஓலை என்பது தெளிவுறல் காண்க.

ஊர் ஆட்சி

ஊரார் ஆட்சிமுறை எப்படி இருந்தது என்பதைத் தெளிவாக அறிதற்குரிய சான்றுகள் கிடைத்தில. ஆயினும் ஊரார், சிற்றுர்ச் சபையாருடன் (ஆள்வாருடன்) கலந்து வேலைகள் செய்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஊர் அவையார் பெருமக்கள் எனப்பட்டனர். இப் பெருமக்கள் உழவு. கோவிற் பணி, அறங்கூறல் முதலிய பல வேலைகளைப் பார்த்துவந்தனர். ஊர் அவை பல உட்பிரிவுகளாகப் பிரிந்து பல துறைகளிலும் நுழைந்து சிற்றுர் ஆட்சியைத் திறம்பெறச் செய்து வந்தது.[2] அக்காலத்தில் இத்தகைய ஊர் அவைகள் ஏறக்குறைய இருபது இருந்தன என்பது பட்டயங்களாலும் கல்வெட்டுக்களாலும் தெரிகிறது. மேலும் பல ஊர் அவைகள் இருந்திருத்தல் வேண்டும். இத்தகைய ஊர் அவைகளே கி.பி. 9ஆம் நூற்றாண்டில் (சுந்தரர் காலத்தில்) திருவெண்ணெய் நல்லூரில் இருந்தது; திருநீலகண்ட நாயனார் காலத்தில் சிதம்பரத்திலும் இருந்தது என்பது பெரியபுராணத்தில் அறிக.


  1. S.I.I. Vol. II part, pp. 109, 110.
  2. R.Gopalan’s “Pallavas of Kanchi’ pp.154-156