பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
229
சமணசமயப் புகழ்பாக்கள்


மருந்துகள் செய்வதற்கும் பயன்பட்டது. இங்ஙனமே செங்கழுநீர் நடுவதற்கும் உரிமை பெறவேண்டும். பிரம்மதேய - தேவதானச் சிற்றுார்கள் வரி இல்லாமலே இதை நடுவதற்கு உரிமை பெற்றிருந்தன. இதன் மலர் பூசைக்கு உரியது. வேர் மருந்துக்கு உரியது. இங்ஙனம் அரசாங்க உரிமை பெற்றுப் பயிரிடப் பட்டவை பல.[1] உப்பெடுத்தலும் சர்க்கரை செய்தலும் அரசாங்கமே கவனித்து வந்தது.[2]

பிற வரிகள்

கால்நடைகளாற் பிழைப்பவர், ‘புரோகிதர், வேட்கோவர், பலவகைக்கொல்லர், வண்ணார், ஆடைவிற்போர், ஒடக்காரர், தரகர், செக்கர், ஆடை நெய்பவர், நூல் நூற்பவர், வலைஞர், பனஞ்சாறு எடுப்போர், நெய் விற்போர், மணவீட்டார் முதலிய பல தொழிலாளரும் பிறரும் அரசாங்கத்திற்குக்குறிப்பிட்டவரி செலுத்தி வந்தனர்’ என்பது பல பட்டயங்களாலும் நன்கு புலனாகும் செய்தியாகும். சிற்றுர்த் தலைவன் சிற்றுர் வருவாயில் ஒரு பகுதியைப் பெற்று வாழ்ந்தான். அவனுக்கு அவ்வூரார் செலுத்தி வந்த வரி ‘விசக்கானம்’ அல்லது ‘வியவன் காணம்’ எனப்பட்டது. இவ் வரிகள் அன்றி நெல் விற்பவர் அரிசி முதலிய பலவகைக் கூலவகைகளை விற்போர் குறிப்பிட்ட அளவையுடைய அரிசியோ பிற கூலமோ வரியாகத் தந்துவந்தனர் என்பதும் தெரிகிறது. இக்காலத்தில் அரசர் தலை இடப்பட்ட திருமுகங்களை நாம் பணம் தந்து பெறுதல்போல - அக்காலத்தில், செய்திகள் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குள் கொண்டு செல்ல வசதி இருந்ததோ என்னவோ தெரியவில்லை. அத்தகைய வசதிக்கென்று வரி இருந்ததை நாம் ஒருவாறு உய்த்துணரலாம். அது ‘திருமுகக் காணம்’ எனப் பெயர்


  1. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallava’s p. 151-153.
  2. உப்பெடுக்கும் உரிமை சாதவாகனர் ஆட்சியிலும் அரசாங்கத்தினிடமே இருந்து வந்தமை இங்கு அறியத் தக்கது.
    Dr.K.Gopalachari’s Early History of the Andhra Country p.115.