பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/250

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
230
பல்லவர் வரலாறு


பெற்றது. கத்தி முதலிய கருவிகளைச் செய்த தொழிலாளர்க்கு விதிக்கப்பட்ட வரி ‘கத்திக்காணம்’ எனப்பட்டது. பறை யடிப்போர் ஒருவகை வரி செலுத்தி வந்தனர். அது ‘நெடும்பறை’ எனப் பெயர்பெற்றது. அறுவடைக் காலங்களில் அரசியல் திறையாக நெல்லைப் பெற வந்த அதிகாரிகட்கு ஊரார் உணவளித்தல் வழக்கம்; அதற்கென்று ஊராரிடம் பெற்று வந்த சிறுதொகை ஒருவகை வரியாகக் கருதப்பட்டது. அதன் பெயர் ‘எ(ல்) சோறு’ (நாட்சோறு) என்பது. ஊர் மன்றங்களில் வழக்காளிகட்கு விதிக்கப்பட்ட தண்டம் ‘மன்று பாடு’ எனப்பட்டது. இங்ஙனம் பல துறைகளினும் வந்த வருவாய் அரசாங்கப் பண்டாரத்தை அடைந்து வந்தது. இதுகாறும் கூறியவற்றால், பல்லவ அரசாங்கம் கணக்கற்ற துறைகளில் வருவாய் பெற்றுவந்தது என்பதை நன்குணரலாம்.[1]

பல்லவர் அரசாங்கப் பண்டாரம்

பல்லவர் வரலாற்றிற் கண்ட போர்களையும், பல்லவர் கட்டிய-குடைவித்த உலகம் போற்றும் கோவில்களையும் நினைக்கும்பொழுது, அவர்தம் செல்வநிலை நன்னிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை அறியலாம். அரசியல் பண்டாரத்தைப் பொறுப்புள்ளவரே காத்து வந்தனர். தண்டன் தோட்டப் பட்டயத்தால், ‘குமாரன்’ என்பவன் பண்டாரத் தலைவன்: அவன் சமயக்கல்வி உடையவன்; அவா அற்றவன்; நடுநிலை யாளன் சிறந்த ஒழுக்கம் உடையவன். பகைவர்க்கும் உறவினர்க்கும் ஒரே படித்தானவன் என்பது தெளிவுறத் தெரிகிறது.[2] இப் பேரரசுக்குரிய பண்டாரத்தலைவன் அன்றி, மாணிக்கப் பண்டாரம் காப்போர் பலர் இருந்தனர். பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும் படி ஆணை இடும் அலுவலாளர் ‘கொடுக்கப் பிள்ளை’ எனப்பட்டனர்.[3]


  1. இத்தகைய பல வரிகள் ஏறத்தாழக் கங்கநாட்டிலும் வசூலிக்கப்பட்டன. Vide M.VK.Rao’s “Ganges otTalakad’ pp.145-150.
  2. S.I.I. Vol.II, pp.525, 530.
  3. 17 of 1899.