பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணசமயப் புகழ்பாக்கள்

231



நில அளவை

பல்லவர் ஆட்சிக்குப்பட்ட நாட்டில் நிலம் முழுவதும் செவ்வையாக அளவை பெற்று இருந்தது. இன்ன பகுதி நிலங்கள் வரியற்றவை என்ற முடியும் பெற்றிருந்தன. நில அளவைக் கணக்குகளையும் வரி அளவை முதலிய கணக்குகளையும் சிற்றுர் - பேரூர் அரசியல் அலுவலாளர் வைத்திருந்தனர். ‘பழம் பிரம்மதேயம் இருபத்து நாலு வேலியும் நீக்கி’ என வரும் பட்டயத் தொடரை நோக்குங்கால், ‘பல்லவர் ஆட்சியில் நில அளவைக்கணக்கு முதலியன உண்டு’ என்பதைத் தெளிவாக உணரலாம். ஒரு குறிப்பிட்ட நிலத்தை அளந்ததும் கள்ளியும் கல்லும் நட்டு எல்லை வகுத்தல் அக் காலப் பழக்கமாக இருந்தது.[1]

நீர்ப்பாசன வசதிகள்

பல்லவர் ‘காடு வெட்டிகள்’ ஆதலால், நீர்ப்பாசன வசதிகள் நிரம்பச் செய்ய வேண்டியவர் ஆயினர். ஏரிகள் ‘தடாகம்’ என்று கூறப்பட்டன. பல்லவர் பல ஏரிகளைத் தம் நாட்டில் உண்டாக்கினர். அவை அரசர் பெயரையோ, தோண்டப்பட்ட இடத்தைச் சேர்ந்த சிறந்த தலைவன் பெயரையோ கொண்டதாக இருக்கும். இராசதடாகம், திரளயதடாகம் (தென்னேரி), மகேந்திர தடாகம், சித்திர மேக தடாகம் (மாமண்டூர் ஏரி), பரமேசுவர தடாகம் (கூரம் ஏரி) வைரமேகன் தடாகம் (உத்திரமேரூர் ஏரி), ‘வாலி வடுகன்’ என்பவன் வெட்டுவித்த வாலி ஏரி, குன்றாண்டார்கோவில்- (புதுக்கோட்டை).திருச்சிராப்பள்ளியில் ஆலம்பாக்கத்தில் ‘மாரிப்பிடுகன்’ என்பவன் வெட்டுவித்த ‘மாரிப்பிடுகு ஏரி’ வடஆர்க்காட்டுக் கோட்டம் குடிமல்லத்தில் உள்ள வெள்ளேரி தும்பான் ஏரி, மூன்றாம் நந்திவர்மன் காலத்துக் காவேரிப்பாக்கம் ஏரி, வந்தவாசிக் கூற்றத்தில் இருந்த மருதாடு ஏரி, வேலூர் கூற்றத்தில் உள்ள கனவல்லி தடாகம் முதலியன குறிப்பிடத் தக்கவை. இவையன்றிக் கல்வெட்டுகளில் குறிபிடப்பெறாத ஏரிகள் பல இருந்தன. இவ்வேரிகளில் பல மழை நீரையே பெற்றவை; சில

  1. Gopalan’s “Pallavas of Kanchi’ p.149.