பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

பல்லவர் வரலாறு



ஆற்று நீரையும் பெற்றவை. இவற்றிலிருந்து கால்வாய்கள் பல இடங்கட்கும் சென்று வயல்கட்கு நீரைப்பாய்ச்சிவந்தன. இந்த ஏரிகள் அல்லாமல் கூவல் (கிணறு)கள் பல எடுக்கப்பட்டன. இக் கிணறுகள் பெரியவை: வயல் கட்கு நீரை உதவுபவை; இப் பெருங்கிணறுகள் போன்றவற்றை இன்றும் தொண்டை நாட்டில் காணலாம். திருவெள்ளறை என்னும் வைணவத் தலத்தில் முத்தரையர் மரபைச் சேர்ந்த கம்பன் அரையன் என்பவன் ‘மாரிப் பிடுகு பெருங் கிணறு’ ஒன்றை எடுத்ததாகப் பல்லவர் பட்டயம் (நந்திவர்மன் காலத்தது) கூறுகின்றது.

பாலாறு காவிரி முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லப் பல கால்வாய்கள் பல்லவர் நாடெங்கும் இருந்தன. அவை ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப் பெயர் பெற்றன. திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் வைரமேகன் (நந்திவர்மன்) வாய்க்கால் இருந்தது. கூரத்தில் இருந்த பரமேசுவர தடாகத்திற்குப் பாலாற்று நீரைக் கொண்டுவந்தது ‘பெரும்பிடுகு வாய்க்கால்’ என்பது. இப் பெரிய கால்களிலிருந்து பிரிந்த கிளைக்கால்கள் பலவாம். அவை ‘குரங்கு, கால். கிளைக்கால், ஓடை எனப் பலவாறு பெயர் பெற்றிருந்தன. அவற்றுள் சில ‘கணபதி வாய்க்கால்’ ‘ஸ்ரீதர வாய்க்கால்’ என்றாற் போல வேறு பெயர்களும் பெற்றிருந்தன.[1] ஆறுகளில் நீர் இல்லாத காலங்களில் ஊற்றுக்கால்கள் எடுத்து நீர் பாய்ச்சப் பெற்றது. ஏற்றம் இறைத்து வயல்கட்கு நீரைப் பாய்ச்சும் முறையும் அக் காலத்தில் இருந்து வந்தது. கால் வசதி இல்லாத இடங்களில் வேறு என்ன செய்யமுடியும்? வாய்க் கால்களில் அங்கங்கு மதகுகள் இருந்து கிளைக்கால்களில் நீரைவிட்டு வந்தன. சிலபெரிய கால்வாய்கள்மீது பாலங்கள் இருந்தன. அங்கு மதகுகள் இருந்தன. அவை தண்ணிரை வேண்டிய அளவு சிறிய கால்வாய்களில் விட்டு வந்தன. மதகில் இருந்த சிறப்பு வாய்கள்


  1. இந்த ஏரிகள் பெருங்கிணறுகள், வாய்க்கால்கள் என்பவற்றிற் பல சோழர் காலத்தில் அப் பெயர்கள் கொண்டே இருந்தன என்பது சோழர் கல்வெட்டுகளால் அறியப்படுகிறது.
    Vide the Author’s “Cholar Varalaru’, Part II.