பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

239



நிறைந்த விளைச்சலை எதிர்பார்த்தல் இயலாது. அரசியல் மூலபண்டாரம், நாட்டுப் பண்டாரம், ஊர்ப்பண்டாரம் என்பவை போரால் வற்றி வயல்களில் நீர்மட்டும் குறைவற இருந்தும் பயன் என்ன? பணமும் இன்றி மழையும் இல்லையேல் நாடு சொல்லொணா வறுமைப் பிணியுள் ஆழ்ந்து விடும். இத்தகைய துன்ப நிலையே அப்பர், சம்பந்தர்காலத்தியமுதலாம் நரசிம்மவர்மன் ஆட்சி இறுதியில் அல்லது பரமேசுவரவர்மன் ஆட்சி இறுதியிலும் - பிற்பட்டபல்லவர் காலங்களிலும் அடிக்கடி உண்டானது. சைவசமய குரவர் திருவிழிமிழலையில் இருந்தபொழுது கொடிய வறுமை நோய் நாடெங்கும் பரவியது. அடியார்கள் உணவின்றித் துன்புற்றனர். அப்பொழுது சமய குரவர் திருவீழிமலைப் பெருமானை வேண்டிக் காசு பெற்று அடியாரை உண்பித்தனர் என்று பெரிய புராணம் கூறும். இக்கூற்றால் நாம் உணரத்தக்க வரலாற்றுச் செய்திகள் இரண்டு. அவை: (1) அவர்கள் காலத்தில் பல்லவ நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது; (2) கோவில் பண்டாரம் அடியார் உணவுக்காகப் பொற்காசுகளை நல்கியது[1] என்பன. இப்பொழுது நடைபெற்ற உலகப் பெரும் போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் பேரரசின் மூலபண்டாரம் எந்த அளவுவற்றிவிட்டது என்பதை நாம் நன்கு உணர்கின்றோம் அல்லவா? இந்த உணர்ச்சியுடன் அக்கால நிலையை நோக்கின், உண்மை புலனாகும்.


  1. ‘திருவிழிழலையில் உள்ள இறைவனைப் பாட இறைவன் காசு கொடுத்தான்’ என்பது, ‘எல்லாம் இறைவன் திருவருளால் நடப்பன’ என்னும் அடியார் கொள்ளும் பொதுக்கொள்கை பற்றியதே என்பதை அறிஞர் உணர்வர்.

    பிற்காலச் சோரு காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கீழே காண்க.

    ‘கி.பி.1152இல் சோழநாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. ஆலங்குடி மக்கள் கோவில் பண்டாரத்திலிருந்து 101 கழஞ்சு நிறையுள்ள பொன் நகைகளும், 464 பலம் நிறையுள்ள வெள்ளிப் பொருள்களும் கடனாகப் பெற்று உயிர் வாழ்ந்தனர்’ என வரும் ஆலங்குடிக் கல்வெட்டின் கூற்று இங்குக் கவனிக்கற்பாலது.

    K.A.N. Sastry’s “Cholas, Vol.II, Part I, p.377.