பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
244
பல்லவர் வரலாறு


தொடங்கி யது ஆதலால் என்க. யாண்டும் போர்களும் சிறு கலகங்களும் நடந்தன. இக்கற்கள் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, செங்கற்பட்டுக் கோட்டங்களிற்றாம் கிடைக்கின்றன.

திருத்தவத்துறை (லால்குடி)யை அடுத்த சென்னி வாய்க்கால் என்ற இடத்திற்கு அருகில் வீரக் கல் ஒன்று உண்டு. அதில் ஒரு மறையவன் உருவம் அம்பைக் கழுத்திற் செருகுதல் போலப் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அடியில், “பாண அரசன் படையெடுப்பால் மடம் ஒன்று அழிந்தது. அதனைக் காக்க முயன்ற இம் மறையவனான சத்தி முற்ற தேவர் இறந்தான்,” என்பது பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி மூன்றாம் நந்திவர்மன் காலத்தது.[1]

கம்பவர்மன் ஆட்சி ஆண்டில் இரண்டு இடங்களில் வீரக்கற்கள் நடப்பெற்றன. ஒன்று ஒலக்கூரில் நடப்பெற்றது. ஒலக்கூரைப் பகைவர் தாக்கியபோது எதிர்த்து நின்ற வீரருள் மாந்திரிகள் ஒருவன். அவன் அப்பொழுது நடைபெற்ற போரில் இறந்தான் என்று கல்வெட்டுக் குறிக்கிறது. ஒலக்கூரைக் கம்பவர்மனே கைப்பற்ற எதிர்த்தான் போலும்![2]

கம்பவர்மனைத் தாக்க வந்த பிருதிவி கங்கராயருடன் உண்டான பூசலில் ‘வாணராயர்’ என்னும் தலைவன் ஒருவன் மாண்டான். அவனுக்கு வட ஆர்க்காடு கோட்டத்து மேல் பட்டியில் வீரக்கல் நடப்பெற்றதென்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.[3]

சில சமயங்களில் வீரக்கல் நடாமல் இறந்தவர் நினைவுக்கு அறிகுறியாகக் கோவில்களில் விளக்கேற்றல் முதலிய பணிகட்காகப் பொருள் அளித்தலும் வழக்கமாக இருந்தது. மாடுபிடிச்சண்டையில்


  1. 144 of 1929.
  2. 357 of 1909. A.R.E. 1910, p.80
  3. 171 of 1921.