பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

353


விழாக்கள் நாடகங்கள் நடத்தினர்;உண்டிச்சாலை, மருத்துவச்சாலை முதலிய நடத்தினர். சுருங்கக் கூறின், அரசர் ஆணைப்படி இம் மறையவர், சிற்றுர்களில் இருந்துகொண்டு பலவகைத் தொண்டுகளைச் செய்து வந்தனர் என்னலாம். புரோகிதர் கோவில் உரிமை பெற்றதும், தமிழ் மக்களிடம் குருக்கள் வேலை தொடங்கியதும் இந்தக் காலமே ஆகும்.[1]

பிரம்மபுரிகள்

பேரூர்களிலும் நகரங்களிலும் கலை வளர்ச்சிக்காக மறையவர் தங்கியிருந்த இடம் பிரம்மபுரி எனப்பட்டது. இவர்க்கு பிரம்மதேயம் இல்லை எனினும், கல்வி கற்பிப்பதற்காக நிலம் மானியமாக விடப்பட்டது. இத்தகைய பிரம்மபுரிகள் கங்கர் தலைநகரான தழைக்காட்டில் பல இருந்தன.[2] இப் பிரம்மபுரிகள் பல்லவர் காலத்தில் இருந்தன என்பதற்குப் பட்டயச்சான்று இல்லை. ஆயினும், சீகாழிக்கு உரிய பல பெயர்களுட் பிரம்மபுரம் என்பதொன்றாகும். இப் பெயர் முதலில் சீகாழிப் பகுதியில் பிராமணர் இருந்த பகுதியை மட்டும் குறித்து வந்து, சம்பந்தர் காலத்தில் சினையாகு பெயராய் நகரத்தையே குறிக்கலாயிற்று[3] எனக் கோடலில் எவ்வித தவறும் இல்லை. சீகாழிப் பிரம்மபுரியில் மறையவர் பலர் இருந்தனர்; வேத வேள்விகளிற் சிறந்திருந்தனர் எனவரும் பெரியபுராணக் குறிப்பும் சம்பந்தர் பதிகக் குறிப்பும் நோக்கத்தக்கன.

பட்டவிருத்தி

பல்லவப் பேரரசர் தனிப்பட்டவர் கல்விக்கு மதிப்பீந்தனர்; சாணக்கியர் பொருள் நூல், ‘மறையில் வந்த அந்தணர் நல்ல வருவாய்


  1. இச் சிற்றுார்களின் செயல்கள் அனைத்தும் தேவாரத் திருமுறைகளில் பரக்கக் காணலாம்.
  2. M.V.K. Rao’s “Gangas of Talakad’, p.265.
  3. சாளுக்கிய நாட்டிலும் பிரம்மபுரிகள் பல இருந்தன. இன்றைய காம்பூர் என்பது பிரம்மபுரிகள் சிதைவேயாகும். அதுவும், சினையாகு பெயராகி (சீகாழியைப்போல, நகரத்தையே குறிக்கலாயிற்று)