பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

பல்லவர் வரலாறு



கொண்ட நிலங்களை இறையிலியாகப் பெறக் கடவர் என்று கூறுகிறது. அம் முறையை இந்தியா முழுவதிலும் இருந்த பெரும்பாலான அரசர் பின்பற்றி வந்தனர். இது பிற்காலச் சோழர் காலத்தில் ‘பட்டவிருத்தி’ எனப்பட்டது. இதனைப் பல்லவ அரசர் செய்து வந்தனர் என்பது பல பட்டயங்களைக் கொண்டு அறியலாம்.

1. ஓங்கோட்டுப் பட்டயம் : விசய கந்தவர்மன் என்ற பிராக்ருத காலப் பல்லவ வேந்தன், தனக்கு உட்பட்ட ஆந்திர நாட்டில் ஓங்கோடு என்ற சிற்றுரைக் கோல சருமன் என்ற மறையவனுக்குத் தானம் அளித்தான். அம் மறையவன் காசியபகோத்திரத்தான். இரண்டு வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் வல்லவன்; அவனுக்குக் கொடுக்கப்பட்ட சிற்றுார் 18 வகை வரியினின்றும் நீக்கப்பட்டது.[1]

2. காசக்குடிப் பட்டயம்: இஃது இரண்டாம் நந்திவர்மனால் விடப்பட்டதாகும். ‘கொடுகொள்ளி’ என்ற சிற்றுர் ‘ஏக தீரமங்கலம்’ என்று பெயரிடப்பட்டுச் ‘சோமயாஜி’ என்ற மறையவற்குக் கொடுக்கப்பட்டது. அம் மறையவன், “கடல் போன்ற வேதங்களைக் கற்றவன், சாமவேதம் பாடவல்லவன், ஆறு அங்கங்களையும் பழுதற உணர்ந்தவன்; கரும காண்டம், ஞான காண்டம் முதலியவற்றில் தேர்ச்சியுற்றவன்; உலகியலை நன்குனர்ந்து நடப்பதில் வல்லவன்.[2] செய்யுள், நாடகம், கதைகள், இதிகாசங்கள், கட்டுக்கதைகள் இவற்றில் சமர்த்தன; எல்லாச்சமயச் செயல்களிலும் தேர்ந்தவன்; நல்லொழுக்கம் உடையவன்; வீட்டை விளக்கு அணி செய்தல் போல நாட்டை அணி செய்பவன் உயர் கல்வி இருந்தும் அடக்கம் உடையவன்; முற்பிறப்பிற் செய்த நல்வினைப் பயனால் இப் பிறப்பில் இவ்வுயர்வைப் பெற்றவன்; இரு பிறப்பாளருள் முதன்மையானவன்; வேத விதிப்படி நடப்பவன்: சாந்தோக சூத்திரத்தைப் பின்பற்றுபவன்; தொண்டை நாட்டில் ‘பூனியம்’ என்ற


  1. Ep.Ind. Vol. XV. p.250
  2. ‘உலகத்தோடொட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலாதார்’ என்ற தமிழ் மறை நோக்குக.