பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

261



சமணக் கலையைப் பரப்ப அமைந்திருந்த நல்லிடம் என்பதில் ஐயமில்லை. மைசூர் - திகம்பர சமணர். ‘திகம்பர சமணர் கலைப்பீடங்கள் நான்கனுள் சமண - காஞ்சி ஒன்று’ என்று கூறல் இதற்கு அரண் செய்தல் காண்க. எனினும், இது பிற்காலச் சோழர் காலத்திற்றான் பெருஞ் சிறப்புப் பெற்றது.

தமிழ்க் கல்வி

பல்லவர் ஆட்சியில் மக்கள் கல்வி, வாணிகம், சமயம், இசை, சிற்பம், ஓவியம், நடனம், நாடகம், முதலிய பல துறைகளில் வளர்ச்சி பெற்றனர். வடமொழிக் கல்லூரிகள் இருந்தன என்பதற்குச் சான்று இருப்பினும், தமிழ்ப்பள்ளிகள் இல்லை என்பது அறிவுடைமை அன்று. தமிழ்க் கல்வெட்டுகள், தமிழ்ப் பாடல்கள் முதுலியன இருத்தலை நோக்க, ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய, சைவ-வைணவத் திருமுறைகள் இருத்தலை நோக்க, தமிழ் நாட்டில் பல்லவர் அரசியல் தமிழ்மொழியிலேயே நடந்திருத்தலைப் பட்டயங்களும் கல்வெட்டுகளுமே அறிவித்தலைக்கான, பல்லவர் ஆட்சியில் தமிழகம் தமிழ் மணத்தில் தழைத்திருந்தது என்பதை உறுதியாகக் கூறலாம். எனவே, தமிழ் நாட்டு ஆடவர் பெண்டிர் பலருள் சிலரேனும் மேற்கூறிய பல கலைகளிலும் பண்புற்று விளங்கினராதல் வேண்டும் எனக் கோடல் தவறாகாது. அறுபான்மும்மை நாயன்மார் வரலாறுகளை நோக்க - அவர்கள் சமயப்பற்றும் தமிழ்ப்பற்றும் பல்கலை உணர்ச்சியும் காண - பல்லவர் அரசாட்சியின் மேம்பாடு குன்றின்மீதிட்ட விளக்கென ஒளிரா நிற்கின்றது. அந் நாயன்மார் மனைவியர் ஒழுகலாற்றை நோக்கப் பல்லவர் காலத்தில் கற்புக்கடம் பூண்டபொற்புடைப் பலர் பல்லவர் நாட்டில் பல்கி இருந்தனர் என்பது விளங்குகின்றது. இங்ஙனமே திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார் முதலிய வைணவப் பெரியார்களும் வாழ்ந்த காலம் இதுவே ஆகும். வாதங்களில் வல்லவரான சமணரும் புத்தரும் வாழ்ந்த காலமும் தத்தம் கலைகளை வளர்த்து மறைந்த காலமும் பல்லவர் காலமே ஆகும்.