பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/292

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
272
பல்லவர் வரலாறு


‘பைரவ மூர்த்தி, பிரம்ம சிரச்சேத மூர்த்தி ஆகியதேவரைக் குறிப்பனவும் உள. காஞ்சியிலும் மாமல்லபுரத்திலும் துர்க்கை, காளி (மகிடாசுரமர்த்தினி) வடிவங்களைக் காணலாம். இவ்வடிவங்களைக் கண்ட டாக்டர் ஒகேல் என்பவர், “ஒவ்வொரு சிற்பமும் காளிக்குத் தலையை அறுத்துக் காணிக்கையாகத் தருதலையே குறிக்கின்றது. இச் செயல் பத்தர்தம் மனவுறுதியை நன்கு காட்டுகிறது” எனக் குறித்துள்ளார்.[1] தலையை அறுக்கத் துணிந்த பத்தனுக்கு எதிர்புறத்தே வேறொரு பத்தன்தன் உள்ளத்து உணர்ச்சியால் உயர்ந்த பத்தி நிலையிலிருந்து வழிபாடு செய்தலையும் அச் சிற்பங்கள் உணர்த்துகின்றன.[2]

சிற்பங்கள்

மகேந்திரவர்மன் காலத்துத்திருச்சிராப்பள்ளி-குகைக்கோவிலின் துர்க்கைக்கு முன் ஒருவன் தன்கழுத்தை அறுத்துப் பலியிடுவதாகச் சிற்பம் காணப்படுகிறது. இக் காட்சி புள்ள மங்கையில் உள்ள சிவன் கோவிலிலும் காணலாம். அங்குள்ள சிற்பங்களில் ஒருவன்கழுத்தை அரிந்துகொள்வதைக் குறிக்கிறது. மற்றொருவன் தன் தொடை யிலிருந்து தசையை அறுத்துக்காளிக்குப் பலியாகத் தருகிறான். மாமல்லபுரத்தில் உள்ள வராகப்பெருமாள் கோவிலில் அச்சுறுத்தும் தோற்றத்துடன் கூடிய துர்க்கை உருவம் காணப்படுகிறது. அங்கும் அழகன் ஒருவன் மதுவேந்திய பாத்திரத்துடன் துர்க்கையை வணங்குகின்றான். வேறொருவன் கோடரி ஒன்றை ஏந்திக் கொண்டே வணங்குகிறான். இத்தகைய சிற்பங்கள் அக்கால உயிர்ப்பலியை நினைப்பூட்டுவனவே அன்றி வேறல்ல.[3]

சான்றுகள்

இங்ஙனம் பைரவர்க்கும் காளிக்கும்.உயிர்ப்பலி (மக்கள் பலி) இடல் பண்டை வழக்கமே என்பது வரலாறு கூறும் செய்தியாகும்.


  1. K. Nilakanta Sastry’s article in “Kalaimagal’ (April, 1932.)
  2. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the - Pallavas’, p.183.
  3. Ibid. p.185.