பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/294

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
274
பல்லவர் வரலாறு


சங்கீரனம்) கடைசியில் உள்ள சங்கீரணம் என்பதைப் புதிதாகக் கண்டு, அதன் வகைகளையும் ஒழுங்குகளையும் அமைத்தவன் என்பது பிற்கால ஆராய்ச்சியாளர் கருத்து. இவனது குடுமியாமலைக் கல்வெட்டு ஒன்று. ‘சித்தம் நமசிவாய’ என்று தொடங்கிப் பலவகைப் பண்களையும் தாள வகைகளையும் விளக்கி, முடிவில், ‘இவை எட்டிற்கும் ஏழிற்கும் உரிய’ என்று முடித்துள்ளது. இதனால், ‘மகேந்திரன் கண்டறிந்த பண்கள் எட்டு நரம்புகளைக கொண்ட வீணைக்கும் பயன்படும். ஏழு நரம்புகளை உடைய வீணைக்கும் உரியன’ என்பது பொருளாகும். ஏழு நரம்புகளைக் கொண்ட வீணையே யாண்டும் இருப்பது. மற்றதை மகேந்திரன் புதிதாகக் கண்டு பிடித்தான் போலும்![1]

மாமண்டூர்க் கல்வெட்டில் ‘ஊர்வரி... கந்தர்வ சாத்திரம்’ என்று மகேந்திரன் இசைச் சிறப்பைக் குறித்துள்ளான். இப்பேரரசன் தான் இயற்றியுள்ள மத்த விலாசத்தில் இசை, நடனம் பற்றியதன் விருப்பைப் பிறர் வாயிலாக வெளிப்படுத்துதல் நோக்கத்தக்கது. “இசை எனது செல்வம் ஆநடிப்பவர் தம் அழகிய நடன்ம் பார்க்க இன்பமானது. தாளத்திற்கும் இசைக்கும் ஏற்ப அவர்கள் திறம்பட மெய்ப்பாடுகளை விளக்கி நடித்தல் இனிமையாக இருக்கின்றது. ‘கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல, ஐயநுண் இடையார் ஆடல் இன்பத்துள் ஆழ்த்துகின்றது.”

மகேத்திரவர்மன் பரிவாதினீ என்னும் பெயர் கொண்ட வீணையில் வல்லவனாக இருந்தான் போலும்! ‘ஒரு பெண்தன் தோழியை அனைத்துக் கொண்டு படுப்பதுபோல நங்கை ஒருத்தி பரிவாதினியை அணைத்துக்கொண்டு ‘உறங்கினாள்’ என்று அசுவகோஷர் புத்த சரிதத்தில் கூறுதல் காணலாம். மேலும் அவர், ‘இந்த வீணை பொன் நரம்புகளை உடையது’ என்கிறார். எனவே, பேரரசனான மகேந்திரவர்மன் சரியான வீணையைத்தான் வைத்திருந்தான் என்பது புலனாகிறது.[2]


  1. Prof Dubreils “pallavas’ pp. 38-40
  2. Dr.C.Minakshi’s pp.242-248.